நேற்றிரவு யாழ்ப்பாணம் முற்றவெளி திறந்த வெளி அரங்கில் தென்னிந்திய பின்னணிப் பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில், பொலிஸார் மற்றும் volunteer குழுவினரால் இரசிகர்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் இசை நிகழ்ச்சி இடையிடையே தடைப்பட்டது. பின்னர் இசை நிகழ்ச்சி இடைநிறுத்தப்பட்டது.
இதில் தமன்னா, ரம்பா, யோகிபாபு, ஸ்வேதா மேனன், பாலா, சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட தென்னிந்திய நட்சத்திரங்கள் பலர் பங்குபற்றினர். இந்த நிகழ்வானது தென்னிந்திய நடிகை ரம்பாவின் கணவரான இந்திரன் மற்றும் நோர்த்; யுனியினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வானது கடந்த டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த நிலையில் அசாதாரண காலநிலை காரணமாக பெப்ரவரி 9ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டது.
ஆரம்பத்தில் இலவசம் என அறிவிக்கப்பட்ட இந்த நிகழ்வானது, பின்னர் 25,000, 7,000, 3,000 மற்றும் பின்னால் நின்று பார்ப்பவர்களுக்கு இலவசம் என அறிவிக்கப்பட்டது.
ஆனாலும் கட்டணத்திற்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் பெரும்பாலான கூட்டம் அனுமதிச் சீட்டுகளே இல்லாமல் நுழைந்ததால் குழப்பம் ஏற்பட்டது. முதியவர்கள், கைக்குழந்தைகளோடு வந்த பலர் பணத்தை செலுத்தியும் ஆசனங்களின்றி நின்றபடி இசை நிகழ்ச்சியை பார்க்க வேண்டிய அவலம் காணப்பட்டதாக பலரும் விசனம் தெரிவித்தனர்.
பெருமளவு தென்னிந்திய நட்சத்திர கலைஞர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்தபோதும் போதிய அளவு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இதனால் தடுப்புகள் உடைக்கப்பட்டு பலர் குறுகிய இடத்திற்குள் நுழைந்ததுடன், தடுப்புகளை உடைத்துக்கொண்டு வரும்போது பணம் செலுத்தியும் கதிரைகள் இல்லாமல் நின்றவர்களோடு மோதுப்பட்டு பலர் நிலைதடுமாறி கீழே விழுந்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது.
அத்துடன் இந்த இசை நிகழ்வில் கலந்துகொள்ளும் நட்சத்திரங்களுடன் விருந்து அருந்தி புகைப்படம் எடுப்பதற்கு 30,000 ரூபா என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து யாழுக்கு வருகை தந்துள்ள தென்னிந்திய பிரபலங்களுடன், புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு பணம் அறவிடப்பட்டால் அவர்கள் தங்கியுள்ள விடுதிகளை முற்றுகையிடுவோம் என அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா ஊடக சந்திப்பில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் நேற்று இசைநிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டு இருந்தவேளை இரசிகர்கள் தடைகளை உடைத்துக்கொண்டு பாய்ந்து உள்நுழைந்துள்ளனர். இதனால் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த பொலிஸார் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் சிக்கலுக்குள்ளாகினர்.
பின்னர் பொலிஸார் மற்றும் volunteer குழுவினரால் இரசிகர்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் இசை நிகழ்ச்சி இடையிடையே தடைப்பட்டது. பின்னர் இசை நிகழ்ச்சி இடைநிறுத்தப்பட்டது.
சரியான திட்டமிடல் இன்மையே இந்த குழப்பத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் காசு கொடுத்து ரிக்கெட் வாங்கிய பலர் இருக்கைகள் இல்லாமையினால் அங்கலாய்த்துள்ளனர்.
நொதேண் யுனியில் கல்வி கற்கும் மாணவர்களும் அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதனை நொதேண் யுனியில் கல்வி கற்கும் மாணவர்களிடம் கூறும்போது அவர்கள், தாங்கள் சம்பளத்துக்கு வேலை செய்யவில்லை என்றும், தாங்கள் கல்வி கற்கும் காரணத்தால் அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததுடன், இது குறித்து மேற்பார்வையாளர்களிடம் முறையிடுமாறும் தெரிவித்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சந்தோஷ் நாராயணன் அவர்களது இசை நிகழ்ச்சி அதே அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டு முற்றிலும் இலவசமாக நடைபெற்றதுடன், அதில் எந்த குழப்பங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.