வடமாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் முறைப்பாடுகளுக்கான தொடர்பு இலக்கங்கள் அடங்கிய அறிவிப்பு பதாகை காட்சிப்படுத்தப்பட வேண்டும் என மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.
நோயாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகள், நோயாளர்களும் வைத்தியர்களும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், சேவையை பெற்றுக்கொள்வதில் தாமதம் அல்லது சிக்கல் ஏற்பட்டால் தொடர்புகொள்ள வேண்டிய உயரதிகாரிகளின் தொடர்பு இலக்கங்கள் ஆகியன குறித்த பதாகையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.
மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாவட்ட, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரின் தொலைபேசி இலக்கங்கள் அறிவித்தல் பதாகையில் கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், பொதுமக்களிடம் இருந்து கிடைக்கும் முறைப்பாடுகள் தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் சுகாதாரத் துறை உயரதிகாரிகளுக்கு வடமாகாண ஆளுநர் கூறியுள்ளார்.
ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் “அபயம்” பிரிவின் தொலைபேசி இலக்கமும் அறிவித்தல் பதாகையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நோயாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதோடு, அவர்களுக்கான சேவையை உறுதிப்படுத்த சுகாதாரத் துறையினர் மேலும் அர்ப்பணிப்போடு செயற்பட வேண்டும் என வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் சுட்டிகாட்டியுள்ளார்.