“வளமான நாடு – அழகான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் கட்சியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திசாநாயக்காவினால் இன்று திங்கட்கிழமை (26) ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் அமைந்துள்ள மொனார்க் இம்பீரியல் ஹோட்டலில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தேர்தல் விஞ்ஞாபனத்தை மத தலைவர்களுக்கு வழங்கிய பின்னர் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அநுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவிக்கையில்,
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு பதிலாக மாற்று முறைமையை செயற்படுத்தும். அனைத்து மக்களுக்கும் சார்பான வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற சட்டவாட்சி கோட்பாட்டை செயல் வடிவில் அமுல்படுத்துவோம்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக 2015 -2019 வரையான காலப்பகுதியில் முன்னெடுத்த செயற்பாடுகளை முடிவுறுத்தி, அனைத்து இன மக்களின் உரிமைகளை அங்கீகரிக்கும் வகையிலான புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம்.
தமிழர்களின் மொழி உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவோம். அரச நிர்வாகத்தில் தமிழர் ஒருவர் தமிழ் மொழியில் கேள்வி எழுப்பும் போது அவருக்கு தமிழ் மொழியில் பதிலளிப்பதை கட்டாயமாக்குவோம்.
அத்தியாவசிய உணவு பொருட்களை இறக்குமதி செய்து உண்ணும் நிலைமை மாற்றம் பெற வேண்டும். தேசிய உணவு உற்பத்தி மேம்பாட்டு திட்டத்தை கட்டம் கட்டடமாக செயற்படுத்துவோம்.
பொருளாதார முன்னேற்றத்தின் பிரதிபலனை நியாயமான முறையில் பொதுமக்களுக்கு பகிர்ந்தளிப்போம். நடுத்தர மக்களை ஏழ்மையில் வைத்துக்கொண்டு நாட்டை முன்னேற்ற முடியாது.
பாடசாலை கல்வி கட்டமைப்பை மறுசீரமைப்போம். உணவு, கல்வி, சுகாதாரம் என்பவற்றுக்கான வற் வரியை நீக்குவோம். நீர் மற்றும் மின்சார கட்டணத்தையும் குறைப்போம் என அநுரகுமார திஸாநாக்க மேலும் தெரிவித்தார்.