வீதிக்கு அடியிலும் மனித எச்சங்கள் இருக்கக் கூடும்! -சுமந்திரன் எம்.பி

”வீதிக்குக் குறுக்காகவும், வீதிக்கு அடியிலும் கூட மனித எச்சங்கள் இருக்க கூடும்” என ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம் .ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

நேற்றைய தினம்  இடம்பெற்ற கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகளைப்   பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே சுமந்திரன் மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”கொக்கு தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது மீளவும்   ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தற்போது விடுவிக்கப்பட்டிருக்கின்ற நிதியினை வைத்து இன்னும் இரண்டு வாரங்களுக்கு அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள முடியும் எனக்  கூறியிருக்கிறார்கள்.

இதேவேளை அகழ்வுப் பணிகளும்   தற்போது சரியான முறையிலே நடைபெறுகின்றன. ஒவ்வொரு உடல்களும் கை, கால், உடம்பு, தலை அனைத்தும் பொருந்தக்கூடிய வண்ணமாக எடுக்கப்படுகின்ற காரணத்தினால்தான் நீண்ட நேரம் இதற்கு செல்வாகின்றது. உடையாமல் கவனமாக எடுக்கப்பட வேண்டிய தேவையும் இருக்கின்றது.

ஆகையினால் ஒவ்வொரு கட்டமாக அகழ்ந்து தற்போது 17 உடலங்கள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இதனை விட கூடுதலான எண்ணிக்கை இருக்கும் என்பது தெளிவாக தெரிகின்றது.

அவர்களுடைய சீருடைகள் மற்றும் வேறு பல பொருட்களும் அடையாளம் காணப்பட்டிருக்கின்றது. ஆகையினாலே எந்த காலத்தில் நிகழ்ந்திருக்கலாம் என்பதனையும் சில பரிசோதனைகளின் பின்னர் அறியக்கூடியதாக இருக்கும் என்ற நம்பிக்கை தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதற்கு சில நாட்கள் எடுக்கும்.

அதுமட்டுமல்லாது வீதிக்கு குறுக்காகவும், வீதிக்கு அடியிலும் கூட சில வேளை மனித எச்சங்கள் இருக்க கூடும் என்ற சந்தேகமும் தற்போது  ஏற்பட்டிருக்கின்றது” இவ்வாறு எம் .ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *