விருப்பு வாக்கு அளிக்கும் செயன்முறை தொடர்பில் மக்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்கள் நிலவுவதாகவும், பெரும்பாலான வேட்பாளர்கள் தமது சின்னத்துக்குப் புள்ளடி இடுமாறு பிரசாரம் செய்துவரும் நிலையில், இது விருப்பு வாக்களிப்பு செயன்முறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கரிசனை வெளியிட்டுள்ளனர்.
நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் கண்காணிப்புப்பணிகளை முன்னெடுப்பதற்காக வழமைபோன்று இம்முறையும் ஐரோப்பிய ஒன்றியம், பொதுநலவாய அமைப்பு, சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு உள்ளடங்கலாக சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புக்களின் தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வமாக அழைப்புவிடுக்கப்பட்டது. அதற்கமைய நாட்டுக்கு வருகைதந்திருக்கும் அவர்கள், ஒன்பது மாகாணங்களிலும் பரந்துபட்ட முறையில் தமது தேர்தல் கண்காணிப்புப்பணிகளை முன்னெடுத்துவருகின்றனர்.
இந்நிலையில் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும், பொதுநலவாய அமைப்பு மற்றும் சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு ஆகியவற்றின் தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை கொழும்பில் அமைந்து தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெற்றது.
இதன்போது இலங்கையின் ஜனாதிபதித்தேர்தல் முறைமை, வாக்கு எண்ணும் செயன்முறை என்பன தொடர்பில் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளிடம் கேட்டறிந்தனர்.
அதேபோன்று இம்முறை விருப்பு வாக்கு அளிக்கும் முறைமை தொடர்பில் மக்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்கள் நிலவுவதை அவதானிக்கமுடிவதாகவும், அதுகுறித்து தெளிவை ஏற்படுத்துவதற்கு ஆணைக்குழு எத்தகைய நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது எனவும் அவர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த ஆணைக்குழு உறுப்பினர்கள், கிராமங்கள்தோறும் விருப்பு வாக்களிப்பு செயன்முறை குறித்து தாம் விளக்கமளித்துவருவதாகத் தெரிவித்தனர்.
இருப்பினும் வேட்பாளர்கள் சகலரும் பெரும்பாலும் தமக்குப் புள்ளடி இடுமாறு விளம்பரப்படுத்துகின்றனரே தவிர, விருப்பு வாக்கு அளித்தல் தொடர்பில் விளம்பரப்படுத்தவில்லை எனச் சுட்டிக்காட்டிய சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள், இது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தாதா என ஆணைக்குழு உறுப்பினர்களிடம் கரிசனை வெளியிட்டனர்.
மேலும் தேர்தல் பிரசார முறைகேடுகள் மற்றும் அவற்றை தேர்தல்கள் ஆணைக்குழு கையாளும் விதம் என்பன குறித்தும் பொதுநலவாய அமைப்பு மற்றும் சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு ஆகியவற்றின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கேட்டறிந்து கொண்டனர்.