விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ஒரு கோடி: TATA நிறுவனம் அறிவிப்பு!

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பேருடன் ஏர் இந்தியா விமானம் (12.06.2025) மதியம் லண்டன் நோக்கிச் செல்ல முற்பட்டது. அப்போது இந்த விமானத்தில் திடீரென ஏற்பட்ட இன்ஜின் செயல் இழப்பால் விமானம் புறப்பட்ட சில நிமிடத்திலேயே விமான நிலையத்திற்கு அருகில் உள்ள மெஹானி எனும் குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியது.

இந்த விமானத்தில் 2 பைலட்கள், 10 பணியாளர்கள், 230 பயணிகள் இருந்த நிலையில் ஒரே ஒரு பயணியை தவிர ஏனைய 241 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் சார்பில் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வெளியிட்டுள்ள பதிவில், “ஏர் இந்தியா விமானம் 171 சம்பந்தப்பட்ட துயர சம்பவத்தால் நாங்கள் மிகுந்த வேதனையடைந்துள்ளோம். இந்த நேரத்தில் நாம் உணரும் துயரத்தை வார்த்தைகளால் போதுமானதாக வெளிப்படுத்த முடியாது. எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுடனும், காயமடைந்தவர்களுடனும் உள்ளன.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் டாடா குழுமம் ₹1 கோடி வழங்கும். காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவுகளையும் நாங்கள் ஈடுகட்டுவோம்.

மேலும் அவர்களுக்குத் தேவையான அனைத்து பராமரிப்பும் ஆதரவும் கிடைப்பதை உறுதி செய்வோம். கூடுதலாக பி.ஜே. மருத்துவ விடுதியைக் கட்டுவதற்கு நாங்கள் ஆதரவளிப்போம். இந்த நினைத்துப் பார்க்க முடியாத நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் சமூகங்களுடன் நாங்கள் உறுதியாக நிற்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *