வாகனம் தவிர்ந்த ஏனையவற்றின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு!

தற்போது இறக்குமதி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுள்ள வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை எதிர்வரும் மாதம் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

“இந்த நாட்டில் மிகப்பெரிய நெருக்கடியாக இருந்த பணம், இன்று சாதாரண நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது. நமது அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு நமது இருப்பு அளவு வலுப்பெற்று வருகிறது. தற்போது சுமார் 600 HSP ஹோட் இறக்குமதி எல்லைகளை நாங்கள் பராமரித்து வருகிறோம் .

அங்கிருந்து, வாகனங்களுக்கான ஏறக்குறைய 270 HSP ஹோட் தவிர மற்ற அனைத்து இறக்குமதி கட்டுப்பாடுகளையும் அடுத்த மாதத்திற்குள் தளர்த்தும் திறன் எங்களிடம் உள்ளது. எதிர்வரும் மாதமளவில் அது இடம்பெறும்.

அதனூடாக, விலை நிலைத்தன்மைக்கு பாரிய நிவாரணம் கிடைக்கக்கூடும். ஏனென்றால், தற்போது அவற்றில் சிலவற்றுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், சந்தையில் தேவைக்கு ஏற்ற வழங்கல் இல்லை.

அதுமட்டுமின்றி விலை உயர்வும் ஏற்பட்டுள்ளது. எனவே, எதிர்காலத்தில் அரசாங்கம் இந்த திறந்த சந்தைக் கொள்கை தொடர்பில் செயற்படுமே தவிர தேவையற்ற தலையீட்டை செய்ய எதிர்பார்க்காது. அங்கிருந்து, அனைத்து வணிக சமூகமும் நியாயமான வர்த்தகத்திற்கு நகரும் என்று நாங்கள் நம்புகிறோம்.”

இதேவேளை, சுங்கத் திணைக்களத்தினால் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட வரி வருமானத்தில் இதுவரை  630 பில்லியன் ரூபாவை வசூலித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *