முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை விடுதலைப் புலிகள் மீளுருவாக்கம் குறித்த வழக்கில் இருந்து விடுதலை செய்யது கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பதே தமது முக்கிய நோக்கம் என அவர் தெரிவித்த கருத்து தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற அரச நிகழ்வொன்றில் சிறுவர் மற்றும் மகளிர் விவகார இரஜாங்க அமைச்சராக இருந்த விஜயகலா மகேஸ்வரன் இவ்வாறு கூறியிருந்தார்.
அவரது உரை இனங்களுக்கு இடையிலான ஓற்றுமையை சீர்குலைக்கும் வகையில் அமைந்தது என தெரிவித்து அன்றயதினமே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் குறித்த வழக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
பிணையில் விடுவிக்கப்பட்ட விஜயகலா மகேஸ்வரனை சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபருக்கு எதிரான வழக்கை தொடர்வதற்கு போதிய சாட்சியங்கள் இல்லை என சட்டமா அதிபர் அறிவுறுத்தியதாக பொலிஸார் முன்னதாக நீதிமன்றில் கூறியிருந்தனர்.