யாழ். வலிகாமம் வடக்கு (காங்கேசன்துறை) பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.
தவிசாளராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
யாழ். வலிகாமம் வடக்கு (காங்கேசன்துறை) பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று (18) பிற்பகல் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.
இதன்போது தவிசாளரை தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த சோமசுந்தரம் சுகிர்தனும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸை சேர்ந்த பத்மநாதன் சாருஜனும் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டார்.
தொடர்ந்து தவிசாளர் தெரிவு பகிரங்க வாக்களிப்பு மூலம் நடைபெற்றது.
இதில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த சோமசுந்தரம் சுகிர்தனுக்கு ஆதரவாக, இலங்கை தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த 10 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த 3 உறுப்பினர்களும், தமிழ் மக்கள் கூட்டணியை சேர்ந்த ஒரு உறுப்பினர் என மொத்தமாக 14 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸை சேர்ந்த பத்மநாதன் சாருஜனுக்கு ஆதரவாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸை சேர்ந்த 6 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியை சேர்ந்த 3 உறுப்பினர்கள் என மொத்தமாக 9 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
அத்தோடு தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த 9 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த 2 உறுப்பினர்களும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த பொன்னம்பலம் இராஜேந்திரம் என மொத்தமாக 12 உறுப்பினர்கள் நடுநிலையாக செயற்பட்டனர்.
இதன் மூலம் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.