வரவு செலவு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றில் தீ வைப்பு!

அல்பேனியாவில் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அல்பேனியாவில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்ற அறையில் தீ மூட்டி பெரும் கலவரத்தில் ஈடுபட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆளும் சோசலிசக் கட்சி நிர்வாகத்தின் வரவு செலவுத் திட்ட அறிக்கை மீதான வாக்கெடுப்புக்கு இடமளிக்க மாட்டோம் எனக் கூறி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் நடுவே நாற்காலிகளைக் குவித்து தீ வைத்து எரித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வாக்கெடுப்பு நடத்துவதற்காக பிரதமர் எட்டி ராமா சபைக்கு வந்ததையடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரதமரை முற்றுகையிடுவதைத் தடுக்க பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நிலமை காரணமாக வாக்கெடுப்பை விரைவுபடுத்தி பாராளுமன்ற அமர்வை ஐந்து நிமிடங்களில் முடிக்க சபாநாயகர் ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் மற்றும் ஏனைய அரச அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஊழல் மோசடிகளை கண்டறிய பாராளுமன்ற ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் பலமான கோரிக்கையை முன்வைத்திருந்த நிலையில், அது அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டது அல்ல என ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *