வடமாகாணத்தில் மாவட்ட ரீதியில் ஜுனியர் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியொன்று நடாத்தப்படவுள்ள நிலையில் அதற்கான குரல் தேர்வுகள் நடைபெறவுள்ள திகதிகள், மற்றும் இடம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதற்கமைய, இந்தப் போட்டியின் முதலாவது குரல் தேர்வு யாழ்ப்பாணம், பிரதான வீதியிலுள்ள திருமுறைக்கலாமன்றத்தில் எதிர்வரும் 2024 ஜுலை 06ஆம், 07ஆம் திகதிகளில் நடைபெற உள்ளதோடு, இரண்டாவது குரல் தேர்வு யாழ்ப்பாணம், மருதனார்மடத்தில் உள்ள வடஇலங்கை சங்கீத சபை மண்டபத்திலும் சாவகச்சேரி நகராட்சி மண்டபத்திலும் எதிர்வரும் 2024 ஜுலை 13ஆம், 14ஆம் திகதிகளில் நடைபெறும்.
இந்தப் போட்டியின் மூன்றாவது குரல் தேர்வு மன்னார், நகர சபை மண்டபத்தில் எதிர்வரும் 2024 ஜுலை 20ஆம், 21ஆம் திகதிகளில் நடைபெற உள்ளதோடு, அடுத்த குரல் தேர்வு பருத்தித்துறை, வல்லை, யாழ் பீச் ஹோட்டலில் எதிர்வரும் 2024 ஜுலை 27ஆம், 28ஆம் திகதிகளில் நடைபெறும்.
அதேவேளை இப் போட்டியின் குரல் தேர்வொன்று கிளிநொச்சி, பரந்தன் ஆர்ஜே மஹாலில் எதிர்வரும் 2024 ஓகஸ்ட் 03 ஆம், 04ஆம் திகதிகளில் நடைபெற உள்ளதாகவும், இறுதிப் போட்டி 2024 செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதலாம் பரிசாக பத்து லட்சம் ரூபாவும், இரண்டாம் பரிசாக மூன்று லட்சம் ரூபாவும், மூன்றாம் பரிசாக ஒரு லட்சம் ரூபாவும் வழங்கப்பட உள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய கலாசார நிலையத்தில் C J Pramoters & Dhedjassam Event Solutions அமைப்பினால் நடத்தப்படும் இந்த இறுதிப் போட்டியில், வடமாகாணத்தில் மாபெரும் ஜுனியர் சுப்பர் சிங்கர் புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி நித்யஸ்ரீ மகாதேவன், தமிழ் திரைப்பட பாடகர் திவாகர், சுப்பர் சிங்கர் புகழ் தென்னிந்திய பின்னணிப் பாடகர் சத்தியபிரகாஷ் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.