யாழ் மாவட்டத்திலும் வைத்தியர்கள் போராட்டம்!

நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு ஆதரவாக வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

குறித்த போராட்டம் தொடர்பில்வடமாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவிக்கையில், 

வைத்தியர்களின் நலன்களுக்கு மேலதிகமாக  எமது மக்களின்  நலன்களின் மீதும் அதீத  கரிசனை கொண்டவர்களாய் செயலாற்றி வருகின்றோம். 

எம்  மக்களின் நலன்களுக்கு எதிராகத் திட்டமிட்டு காலத்திற்குக் காலம் பல்வேறு வடிவங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற  வைத்தியத்துறை சார் குறைபாடுகள் அசண்டையீன செயற்பாடுகள் மற்றும் நெருக்கீடுகளை முன்கூட்டியே  அறிந்து எமது மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகளை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினராகிய நாம் காலம் காலமாக மேற்கொண்டு வருவது நீங்கள் யாவரும் அறிந்ததே. 

எமது கடந்த கால வரலாறுகள் இதைக் கட்டியம் கூறும் குறிகாட்டிகளாகும். அந்த வகையில் அண்மைக் காலங்களில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மருந்துப் பற்றாக்குறை,  அதனால் ஏற்பட்ட பாதிப்புகள், அதை நிவர்த்தி செய்ய அவசரமாக கொள்வனவு  செய்யப்பட்ட தரம் குறைந்த மருந்துகள் தொடர்பாகவும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பாகவும், மருந்துகளின் கொள்வனவில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பாகவும் நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினராகிய நாம் இதற்கு எதிராகக் குரல் கொடுத்ததோடு மக்களுக்கு தெளிவு படுத்துவதற்காக அடையாளப் பணிப் புறக்கணிப்புப் போராட்டங்களையும், ஊடக சந்திப்புகளையும் நடாத்தியிருந்தோம்.

இது தொழிற்சங்கம் ஒன்றின் தார்மீக கடமையும் உரிமையும் ஆகும்  .  மக்களுடைய நன்மையை கருத்தில் கொள்ளாது செயற்படும் அதிகாரிகள் மக்களுக்காய்க் குரல் கொடுத்த வைத்தியர்களைப் பழிவாங்கும் நோக்குடன் எமது தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை ஆரம்பித்தது. ஒருதலைப் பட்சமான ,தகுந்த தொழில்நுட்ப அறிவற்ற விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட்டு இவ்  விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. 

இதனை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினராகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இனங்காணப்பட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையிலான செயற்பாடுகளை மேற்கொள்ளாது  உயர்நோக்குடன் செயற்பாடுபவர்களின் குரலை நசுக்க இவர்கள் முற்படுகின்றனர். 

இதனை மக்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் ஒரு மணி நேர அடையாளப் பணி புறக்கணிப்புப் போராட்டம்  ஒன்றினை நடாத்தியிருந்தோம். 

சரியான தீர்வு கிடைக்காவிடில் இலவச சுகாதார சேவைக்கு எதிராகத் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக இப் போராட்டமானது மேலும் மக்களின் ஆதரவுடன் விஸ்தரிக்கப்படும் என்பதை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் ஆகிய நாம் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *