யாழ் மாநகர சபையை த்ன்வசமாக்கியது தமிழரசு கட்சி – முதல்வரானார் மதிவதனி!

யாழ் மாநகர சபையின் முதல்வராக மதிவதனி விவேகானந்தராஜா 19 வாக்குகளை பெற்று முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

யாழ் மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை யாழ் மாநகர சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது.

யாழ் மாநகர சபை 45 உறுப்பினர்களை கொண்ட சபையாகும். 

இலங்கை தமிழ் அரசுக் கட்சி 13 ஆசனங்களையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 12 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி 10 ஆசனங்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியன தலா 4 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன தலா ஒரு ஆசனங்களையும் பெற்றுள்ளனர்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் முதல்வர் பதவிக்கு விவேகானந்தராஜா மதிவதனியின் பெயரையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் முதல்வர் பதவிக்கு கனகையா ஶ்ரீ கிருஷ்ணாவும் பரிந்துரைக்கப்பட்டது.

முதல்வர் தெரிவு பகிரங்க வாக்கெடுப்பு மூலம் இடம்பெற்றது. அதன் போது, தமிழரசு கட்சி, ஈழமக்கள் ஜனநாயக கட்சி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன தமிழரசு கட்சியின் சார்பில் போட்டியிட்ட மதிவதனி விவேகானந்தராஜாவிற்கு வாக்களித்தனர்.

அதன் மூலம் 19 வாக்குகளை பெற்று முதல்வராக தெரிவானார்.

அதேவேளை தேசிய மக்கள் சக்தியினர் நடுநிலை வகித்தமை குறிப்பிடத்தக்கது.

துணை முதல்வராக தமிழரசு கட்சியின் உறுப்பினர் இமானுவேல் தயாளன் தெரிவாகியுள்ளார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முதல்வர் வேட்பாளருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன ஆதரித்து வாக்களித்து வெற்றிபெறச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *