பரதக்கலை தொடர்பாக மௌலவி ஒருவர் தெரிவித்த சர்ச்சைக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த ஆர்ப்பாட்டம் சுமார் 45 நிமிட நேரம் விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவககத்தின் முன்பாக இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள்,விரிவுரையாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது நடன உடையுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் ”பரதக்கலை என்பது தமிழர்களின் பூர்வீக கலையாகும். இக்கலையை தெய்வீக கலையாக நாங்கள் கருதிவரும் நிலையில் அதனை கீழ்த்தரமாக விமர்சனம் செய்த குறித்த மௌலவிக்கு எதிராக உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்” இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.