திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய மூவரின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லையென சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே புகழேந்தி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” ஈழ தேசத்துக்கு உயிரோடு வருவதற்குக் காத்திருந்த சாந்தன் சடலமாகவே கொண்டு வரப்பட்டார். சாந்தன் என்னிடம் பேசிய போது தான் ஈழத்துக்குச் சென்றால் தனக்கு மக்கள் எப்படியெல்லாம் வரவேற்புக் கொடுப்பார்கள் என்று வந்து பாருங்கள் எனச் சொல்லியிருந்தார்.
ஆனால், உயிர் இல்லாமல் அவர் கொண்டு வரப்பட்டபோது வீதிகள் எங்கும் மக்கள் திரண்டு கண்ணீர்மல்க தமது அஞ்சலியைச் செலுத்தியிருந்தனர். அவர் இறந்தாலும் கூட அவர் கொண்ட கொள்கையையும், அவரையும் மக்கள் எந்தளவுக்கு நேசிக்கின்றார்கள் என்பதைக் காணக் கூடியதாக இருந்தது.
மேலும் தனது தாயாரின் கையால் ஒருபிடி சோறு சாப்பிட வேண்டும் என்பதுதான் சாந்தனின் இறுதி ஆசையாக இருந்தது.
சாந்தனுடன் விடுவிக்கப்பட்ட மற்றைய மூவரும் இலங்கைக்கு வருவதற்கு அச்சப்பட்டு தாங்கள் விரும்புகின்ற நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு கோரியுள்ளனர். உண்மையில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம் என்பது சிறையை விட மிகவும் கொடூரமானது.
எனவே அவர்களை அங்கிருந்து வெளியில் கொண்டு வரவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே, இங்குள்ள தமிழ்த் தேசியக் கட்சிகள் இதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் ” இவ்வாறு தெரிவித்துள்ளார்.