மூத்த ஊடகவியலாளரும், சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் செயலாளருமான திரு.தம்பிப்பிள்ளை குகதாசன் (குகன்) அவர்கள் டென்மார்க்கில் கடந்த (25-06-2024) செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
இவர் ஆரம்ப காலங்களில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த “ஈழநாடு” பத்திரிகையில் பணியாற்றிய பின் போர்க்கால சூழல் காரணமாக புலம் பெயர்ந்து டென்மார்க்கை தனது வசிப்பிடமாக மாற்றியிருந்தார்.
அங்கும் டெனிஸ் ஊடகமொன்றில் தனது ஊடக பணியை தொடர்ந்துவந்த அவர் தாயகத்தில் தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக பணியாளர்கள் எதிர்னோக்கும் அடக்குமுறைகளுக்கு எதிராக சர்வதேச அரங்கில் குரல் எழுப்பி வந்தவர்.
அதன் நீட்சியாக தமிழ் ஊடகவியலாளர்களுக்கான குரலாக தமிழ் ஊடக அமைப்பு ஒன்று வேண்டும் என்ற கருப்பொருளை முன்மொழிந்த அவர் ஐரோப்பிய நாடுகளில் இருந்த தனது ஊடக நண்பர்களை அணுகி அது தொடர்பில் உரையாடி அவர்களின் முழு ஆதரவோடும் 2006 ஆம் ஆண்டு “சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம்” உருவாக்கப்பட்டது.
அவ் அமைப்பின் நிறுவுனர்களில் ஒருவராகவும், ஆரம்பம் முதல் தனது இறுதிக் காலம் வரை அவ் அமைப்பின் செயலாளராகவும் அர்ப்பணிப்போடு அயராது பணியாற்றியவர்.
அப்படிப்பட்ட ஓர் அரிய செயற்பாட்டாளரான குகன் அவர்களை இழந்தமையானது தமிழ் ஊடகப்பரப்பில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது பிரிவுக்கு ஊடகவியலாளர்கள் பலரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.