முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று (31) காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யுத்தம் நிறைவடைந்த நாள்முதல் தமது உறவுகளுக்கான நீதி கோரி போராடிவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடந்த 2017 மார்ச் 8 ஆம் திகதி முதல் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
“கொடுப்பனவுகளை கொடுப்போம் என்று சொல்வது கொலை செய்த கதையை மறைக்கவே”, “இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளுக்கு இறப்பு சான்றிதழ் தான் பதில் என்றால் கொலை செய்தவன் யார்?” , “omp ஒரு கண்துடைப்பு நாடகம்”, “சர்வதேச விசாரணையே தேவை”, “இழப்பீடுகள் வேண்டாம், எமக்கு பிள்ளைகள் வேண்டும்” போன்ற பல கோசங்களையும், பதாகைகளையும் ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.