மியன்மாரில் உள்ள இணையக்குற்ற முகாமிலிருந்து மீட்கப்பட்ட 20 இலங்கையர்கள் இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளனர். மியன்மாரின் மியாவாடி பகுதியில் உள்ள இணையக்குற்ற முகாம்களில் பிணைக் கைதிகளாக இருந்த மேலும் 20 இலங்கை பிரஜைகள் மீட்கப்பட்டதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் ஒகஸ்ட் மாதம் 15 ஆம் திகதியன்று உறுதிப்படுத்தியது.
இதன்போது மீட்கப்பட்ட இலங்கையர்கள் தாய்லாந்துக்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டு தாய்லாந்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பாதுகாப்பில் இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.
மியாவாடியில் உள்ள சைபர் கிரைம் முகாம்களில் சிக்கியிருந்த 56 இலங்கையர்களில் எட்டு பேர் மியன்மார் அரசாங்க அதிகாரிகளால் மார்ச் மாதத்தில் மீட்கப்பட்டு, ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதியன்று நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.
மியன்மாரில் உள்ள இணையக்குற்ற முகாம்களில் இன்னும் 34 இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே தற்போது மியன்மாரின் மியாவாடி பகுதியில் சிக்கியுள்ள ஏனைய 34 இலங்கையர்களை, தொடர்புடைய அரசாங்கங்களின் ஆதரவுடன் மீட்பதற்கு யாங்கூன் மற்றும் பெங்கொக்கில் உள்ள இலங்கை தூதரகங்கள் மூலமாகவும் அவர்கள் பணியாற்றி வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக மியன்மாருக்குச் சென்ற இலங்கையர்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான முறையான நடைமுறைகளைப் பின்பற்றாது சுற்றுலா விசாவைப் பயன்படுத்தாமல், இணையக் குற்றச் செயல்களில் ஈடுபடுத்தப்பட்டு, ஆட்கடத்தலுக்கு ஆளானதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
மேலும், ஆட்கடத்தலுக்கு உள்ளாகாமல், வெளிநாட்டில் தொழில் வாய்ப்புகளை பெறும்போது, பொதுமக்கள் எச்சரிக்கையாகவும், முறையான நடைமுறைகளை கடைபிடிக்குமாறும் வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.