மாத்தறை – பெலியத்தை பகுதியில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மாத்தறை – பெலியத்த நுழைவாயிலுக்கு அருகிலேயே இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
டிபென்டர் ரக வாகனத்தைக் குறிவைத்தே இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கெப் ரக வாகனம் ஒன்றில் வந்த இனந்தெரியாத குழுவினாரால் இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ஒருவர் தங்கல்ல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேராவும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிப் பிரயோகமானது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.