உலக தமிழரின் குரலாக 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிபிசி தமிழோசை வாயிலாக ஓங்கி ஒலித்து அண்மையில் மறைந்த மூத்த ஊடகவியலாளர் “திருமதி. ஆனந்தி சூரியப்பிரகாசம்” அவர்களுக்கு லண்டனில் நினைவு வணக்க நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆனந்தி அக்கா என பலராலும் அழைக்கப்பட்ட, அறியப்பட்ட திருமதி. ஆனந்தேஸ்வரி சூரியப்பிரகாசம் அவர்கள் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் நிறுவனர்களில் ஒருவராகவும், அதன் தலைவியாக தொடர்ந்து 19 ஆண்டுகள் பணியாற்றியவருமாவார்.
பிரித்தானியாவை தளமாக கொண்டியங்கும் “சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின்” ஒருங்கிணைப்பில் லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு வரும் 09-03-2025 ஞாயிறு அன்று மாலை 4:00 மணி முதல் மாலை 8:00 மணிவரை 10 Stonefield Way, Ruislip, HA4 OJS இல் அமைந்துள்ள Grantview Banqueting Hall இல் நடைபெறவுள்ளது.
இலங்கை தீவில் சிங்கள பெளத்த பேரினவாத அரசாங்கங்களால் தமிழர்கள் மீதும், தமிழர் தாயகப் பரப்புக்கள் மீதும் நடாத்தப்பட்ட அடக்குமுறை, போர், செய்தித்தணிக்கை என பல இன்னல்களை சந்தித்திருந்த காலத்தில் தமிழர்களுக்கு பிரித்தானியத் தலைநகர் லண்டனில் இருந்து ஒலிபரப்பான பிபிசி தமிழோசையும், பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து ஒலிபரப்பான வெரித்தாஸ் வானிலியுமே செய்திகளை அறிந்து கொள்ளும் ஊடகங்களாக திகழ்ந்தவை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
