மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் சுதந்திரமாகத் தமது கருத்துகளைத் தெரிவிக்கமுடியாத வகையில் பிள்ளையான் ( சிவநேத்துறை சந்திரகாந்தன்) போன்றோரினால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் தமது ஆட்சி உருவானால் இவ்வாறான நிலைமைகள் மாற்றப்படும் எனவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட மாநாடு நேற்று பிற்பகல் மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள வில்லியம் மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் மகிந்த ஜயசிங்க உட்பட பலர் கலந்துகொண்டனர். இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்திற்கான நிர்வாகம் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டதுடன் பல்வேறு கலை நிகழ்வுகளும் சிறப்புரைகளும் நடைபெற்றன.
இங்கு உரையாற்றிய அனுரகுமார திசாநாயக்க ”இந்த நாட்டில் மக்கள் மாற்றம் ஒன்றை எதிர்பார்த்துநிற்கின்றனர். அந்த மாற்றம் எங்கு ஏற்படவேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.