பொதுவான நினைவுச்சின்னம் ஒன்றை அமைப்பதற்கு தமிழினம் என்றும் அனுமதிக்காது!

போரில் உயிரிழந்த அனைவருக்கும் பொதுவான நினைவுச்சின்னம் ஒன்றை அமைப்பதற்கு தமிழினம் அனுமதியாது என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகம் போரில் இறந்த இராணுவத்தினர், விடுதலைப் போராளிகள், பொதுமக்கள் ஆகிய முத்தரப்பினருக்கும் பொதுவான நினைவுச்சின்னம் ஒன்றை அமைப்பதாக முடிவெடுத்து அதனை விரைவில் நிறுவுவதற்கான தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.

இது தொடர்பாக அரசதரப்பால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு யாழ்ப்பாண – மாவட்டச் செயலகத்தில் கடந்த சனிக்கிழமை கலந்துரையாடலொன்றை நிகழ்த்தியுள்ளது. தமிழர் தாயகத்தின் ஏனைய மாவட்டங்களிலும் இக்கலந்துரையாடல் தொடர்ந்து இடம்பெறவுள்ளது.

இது குறித்து ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதுடன், அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் தீர்மானத்துக்கமைவாக நல்லாட்சி அரசாங்கம் தான் ஏற்றுக்கொண்ட நிலைமாறுகால நீதிப்பொறிமுறையின் கீழ் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாகப் போரில் உயிர்நீத்தவர்களுக்கான பொது நினைவுச் சின்னமொன்றை அமைப்பதற்கு முடிவெடுத்திருந்தது.

போராளிகளையும் பொதுமக்களையும் அவர்களைக் கொன்றொழித்த படைத்தரப்பையும் ஒன்றாக நினைவிற் கொள்ளும் இம்முடிவிற்குத் தமிழ் மக்கள் அப்போதே தமது எதிர்ப்பை வெளிக்காட்டியிருந்தார்கள். இவ்வெதிர்ப்பைக் கருத்தில் கொள்ளாது அதனை எவ்வடிவத்தில் அமைப்பது என்பது தொடர்பான கலந்துரையாடல் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இக்கலந்துரையாடல் பொது அழைப்பும் ஊடகங்களின் பங்கேற்பும் இல்லாது நிபுணர்குழு தெரிவுசெய்து அழைத்திருந்த மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையினருடன் மட்டுமே இடம்பெற்று வருகின்றது.

போர் முடிவுற்று பதின்னான்கு வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான எந்தவொரு ஆக்கபூர்வ சமிக்ஞையினையும் அரசதரப்பு வெளிக்காட்டவில்லை போர்மரபுகளையும் மீறி மாவீரர் துயிலுமில்லங்களைச் சிதைத்தழித்த அரசதரப்பு, யுத்தவெற்றியைப் பறைசாற்றும் விதமாகப் படைத்தரப்பினருக்கான நினைவுச் சின்னங்களைத் தமிழர்தாயகப் பகுதியெங்கும் அமைத்துள்ளது.

ஆனால், அகிம்சை வழியில் போராடி உயிர்துறந்த திலீபனின் நினைவுகூருதலை சிங்களக் குண்டர்களின் மூலமும், தனது ஏவல்துறையான காவல் துறையின் மூலமும் குழப்பி வருகின்றது.

திலீபனின் நினைவேந்தல் நாட்களிலேயே இனநல்லிணக்கத்தின் பெயரால் பொது நினைவுச் சின்னமொன்றை அமைப்பதற்கான கலந்துரையாடலையும் நிகழ்த்துகிறது. உலகை ஏமாற்றும் அரசாங்கத்தின் இந்நிகழ்ச்சி நிரலுக்குத் தமிழ்மக்கள் ஒருபோதும் ஒப்புதல் வழங்கமாட்டார்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *