பேரினவாத கட்சிகளை ஆதரிக்க கூடிய மனநிலையில் தமிழ் மக்கள் இம்முறை இல்லை:

தமிழ் மக்கள் இம்முறை தேர்தலில் பேரினவாத கட்சிகளை ஆதரிக்க கூடிய மனநிலை வரும் என்பதனை நாங்கள் பார்க்கவில்லை என முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

ரணில் மொட்டு கட்சியிலே இருக்கின்றவர்கள் கூறுவதற்கு தலையாட்டுகின்ற ஜனாதிபதியாக தான் இதுவரையில் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது அதில் அவர் பல்வேறுபட்ட கருத்துக்களை கூறியிருக்கின்றார் யாழ்ப்பாணத்திற்கு பலமுறை சென்றிருக்கின்றார் மட்டக்களப்பிற்கும் வருகை தந்திருக்கின்றார் வடகிழக்கு மக்களுக்கான பிரச்சினையை தீர்ப்பதாக 13 வது அரசியல் யாப்பை அதிகார பரவலை செய்வதாக கூறியிருந்தார் ஆனால் எமது சம்பந்தன் ஐயாவின் இறுதி கிரியையில் வந்து அவர் பேசுகின்ற போது பொலிஸ் அதிகாரத்தை விட்டு ஏனைய அதிகாரங்களை தான் தருவதற்கு தயாராக இருப்பதாக கூறி இருக்கின்றார்.

மாறுபட்ட கருத்துக்கள் முழுமையான அதிகாரம் தரக்கூடிய எந்த ஒரு வேட்பாளர்களாகவும் தமிழ் மக்களுக்கு இந்த வேட்பாளர்களை நாங்கள் பார்க்க முடியாத நிலை இருக்கின்றது தமிழ் மக்களை ஒரு வாக்கு பெறுகின்ற தரப்பாக பாவித்து தாங்கள் நினைப்பதை சாதிக்கின்ற ஜனாதிபதிகளாகத்தான் இந்தமுறை வருகின்றவர்கள் இருக்கின்றார்கள்.

இதற்கு முன்னர் இருந்த எட்டு ஜனாதிபதிகளை பார்க்கின்றோம் இவர்கள் அனைவரும் எங்களை ஏமாற்றியவர்களாக இருந்திருக்கின்றார்கள் குறிப்பாக 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் தேதி செய்து கொல்லப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தம் இன்று 37வது ஆண்டு விழாவை காண இருக்கின்றது.

ஆகவே இந்த 37 வருடங்களாக இலங்கை இந்தியா ஒப்பந்தத்தில் கூறப்பட்ட இலங்கை அரசாங்கத்தினால் அதாவது 1987 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் தேதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 13 வது அரசியல் யாப்பில் கூறப்பட்ட விடயங்களை இதுவரையில் அமல்படுத்தவில்லை.

தொடர்ச்சியாக மக்கள் ஏமாற்றப்பட்டு இந்த ஜனாதிபதி தேர்தலில் அந்த 37 வருடங்களுக்கு முன் போடப்பட்டதை தூசிக் தட்டிக் கொண்டு மக்கள் மத்தியில் சில விடயங்களை கூறுகின்றார்கள்.

நாங்கள் கேட்பது அதுவல்ல 13 வது அரசியல் யாப்பு விடயத்தை வைத்து நீங்கள் எங்களிடம் வாக்கு கேட்பதை விடுத்து இணைந்த வட கிழக்கில் சமஸ்டி அடிப்படையிலான தீர்வு தருவோம் என்று தேர்தல் விஞ்ஞாபனத்தில் பகிரங்கமாக கூறுவார்களாக இருந்தால் அது பரிசீளிக்க தயாராக இருக்கின்றோம்.

இவர்கள் ஏமாற்றப்பட்டதன் விளைவாகத்தான் தமிழ் பொது வேட்பாளர்களை நிறுத்துவதற்காக ஏறக்குறைய 8 தமிழ் தேசிய கட்சிகள் அதைவிட 92 அமைப்புகளும் பிரதிநிதிகள் இணைந்து ஒரு முதன் முதலாக இலங்கையில் தமிழ் பொது பொறுப்பாளரை ஆதரிக்க வேண்டும் என்கின்ற பிரச்சாரமும் முன்னெடுத்து கொண்டு செல்லப்படுகின்றது.

இந்த விடயங்களை பார்க்கின்ற போது தமிழ் மக்கள் இம்முறை தேர்தலில் நான் நினைக்கவில்லை பேரினவாத கட்சிகளை ஆதரிக்க கூடிய மனநிலை வரும் என்பதனை நாங்கள் பார்க்கவில்லை ஆனால் தேர்தல் விஞ்ஞாபனம் எந்த வகையில் வரும் என்பதனை பொறுத்திருந்து பார்க்க இருக்கின்றோம்.

ரணிலுக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பார்களா என்கின்ற கேள்விக்குறி எனக்கு இருக்கின்றது ஏனென்றால் அவருக்கு ஆதரவளிக்கின்றவர்களை நாங்கள் பார்க்கின்ற போது அரசாங்கத்துடன் ஏற்கனவே இருந்தவர்கள் தமிழ் தேசியத்திற்கு எதிராக நின்றவர்கள் தமிழ் தேசியத்தை சிதைப்பதற்காக நின்றவர்கள் தான் அது வடக்காக இருக்கலாம் அல்லது கிழக்காக இருக்கலாம் அவரை ஆதரிப்பதாக இப்போது பகிரங்கமாக கூறியிருக்கிறார்கள்.

ஆனால் இந்த ஊழல் தொடர்பாக பல விடயங்களை செய்வேன். ஊழல் தொடர்பாக ஒழிப்பேன் என்கின்ற விடயங்களை கூறுகின்றது எல்லாம் உங்களுக்கு தெரியும் ரணில் விக்கிரமசிங்கை பொறுத்த வரையில் எந்த விதத்தில் அரசியலில் நின்று எவ்வாறு தமிழ் மக்களை பிரித்தாடுகின்ற தன்மையை விடுதலைப் புலிகளை 2004 ஆம் ஆண்டு தான் பிரித்ததாக அவரை ஒப்புக்கொண்டு பாராளுமன்றத்தில் கூறியிருக்கின்றார்.

அவருக்கு ஆதரவு தெரிவிப்பதாக தற்போது கூறுகின்ற கருணா அவர்கள் மீண்டும் அதனை கூறுகின்றார் என்னை பிரித்தது மஹிந்த ராஜபக்ஷ அல்ல தற்போது இருக்கின்ற ஜனாதிபதி அவர்தான் பிரித்தார் என கூறுகின்றார்.

ஆகவே இவ்வாறு தமிழ் தேசியத்தை விடுதலை புலிகள் போராட்டத்தை பிரித்தவர் நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பை தமிழ் தேசிய அரசியலில் இருந்து அதனை பிரிப்பதற்கான முயற்சியை செய்தவர் அதில் வெற்றி கண்டவர் 16 உறுப்பினர்களை 10 உறுப்பினர்களாக குறைத்த பெருமையும் ரணில் விக்ரமசிங்க அவர்களையே சாரும்.

இவ்வாறான விடயங்களை வைத்துக்கொண்டு மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சியில் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்கினால் தான் அவர் தற்போது ஜனாதிபதியாக இருக்கின்றார் அவர் எதை கூறினாலும் முதலாவது அவர் இருக்கின்ற அந்த கட்சியிலே அல்லது அல்லது அவர்கள் ஏற்கனவே செய்த விடயங்களை எதையும் செய்யவுமில்லை செய்யவும் மாட்டார்.

இப்போது போட்டியிடுகின்ற பிரதான வேட்பாளராக இருக்கின்ற மூன்று வேட்பாளர்கள் ரணில் விக்ரமசிங்கமாக இருக்கலாம் சஜித் பிரேமதாசாவாக இருக்கலாம் அனுரகுமார திசாநாயக்கவாக இருக்கலாம் எவருமே ஜனாதிபதியாக தேர்தலில் போட்டியிட்டு தோல்வி கண்டவர்கள்.

இதில் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் அதிர்ஷ்டத்தினால் ஜனாதிபதியாக அவர் இருக்கின்றார்.

அநுரகுமார திசநாயக்க, நான் 2004 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது இவருடைய கட்சி தான் 2006 ஆம் ஆண்டு இணைந்த வடகிழக்கை பிரித்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அதில் வெற்றி கண்டவர்கள் அவர்கள் இந்த வழக்கு தாக்கல் செய்யாமல் இருந்திருந்தால் இன்று இணைந்த வட கிழக்குக்கு நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெற்றிருக்கும். அவ்வாறானவர்கள் இணைந்த வடகிழக்கை பிரித்து விட்டு இப்போது மக்கள் மத்தியில் நாங்கள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை தரப் போகின்றோம் அல்லது தமிழ் மக்களுக்கான முன்னேற்றத்தை அரசியல் விடயத்தை செய்யப்போகின்றோம் என்று கூறுவதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத கதையும் மக்களை ஏமாற்றுகின்ற விடயமாக தான் இருக்கின்றது.

அதேபோன்று சஜித் பிரேமதாசாவை எடுத்து நோக்குவோமாக இருந்தால் அவரைக் கூட நான் உத்தமனாக பார்க்கவில்லை ஏன் என்றால் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2020 ஆம் ஆண்டு வரை இருந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஆயிரம் பன்சாலைகளை கட்டுவதற்கான ஒரு பிரேரணையை கொண்டு வந்து பல இடங்களில் வடக்கு கிழக்கில் பன்சாலைகளை கட்டுவதற்கு துணை போனவர் அவர்தான் அவரையும் ஒரு இனவாதியாக தான் நாங்கள் பார்க்கின்றோம்.

தேர்தல் வருகின்ற போது தமிழ் மக்களை கவர்கின்ற விதத்தில் பல வாக்குறுதிகளை தருவார்கள் அதை நம்பி இங்கிருக்கின்ற முகவர்கள் அவர்களுக்கு பின்னால் செல்வார்கள் அந்த முகவர்கள் தங்களுக்குரிய சலுகைகளை பெற்றுக் கொண்டு தமிழ் மக்களை ஏமாற்றுவார்கள் அது இம்முறை தேர்தலில் இடம் பெறும்.

ஆகவே இந்த விடயங்களில் தமிழ் மக்கள் அவதானமாக பார்க்க வேண்டி இருக்கின்றது நாங்கள் 75 வருடங்களாக இப்போது இனப்பிரச்சனைக்காக அகிம்சை ரீதியாக ஆயுத ரீதியாக போராடி இப்போது ராஜதந்திர ரீதியாக போராட்டம் சென்று கொண்டிருக்கின்றது.

இந்த விதத்தில் தான் 8 ஜனாதிபதிகளிடமும் நாங்கள் படித்த படிப்பினை கற்றுக் கொண்ட பாடம் ஏமாற்றங்கள் தான் இப்போது இந்த 15 வருட முள்ளிவாய்க்கால் மௌனித்ததன் பிற்பாடு 3 ஜனாதிபதிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் சொல் கேட்டு தமிழ் மக்கள் ஆதரித்தார்கள் அவர்களும் ஏமாற்றியதன் விளைவாகத்தான் இம்முறை ஒரு புது விதமான நடவடிக்கை அதாவது பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்கின்ற விடயம் முன்னுரிமை பெற்றுக் கொண்டிருக்கின்றது.

ஆகவே எக்காரணம் கொண்டும் தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக வர மாட்டார் அந்த ஜனாதிபதியாக வருகின்றவர் அந்த ஜனாதிபதிக்காக போடுகின்ற வாக்கு என்பதை நாங்கள் தான் நீங்கள் நீங்கள் தான் என்கின்ற விடயம் காட்டப்பட இருக்கின்றது இதில் நாங்கள் மிகவும் கரிசினையாக நாங்கள் பரிசீலித்துக் கொள்ள வேண்டும்.

தமிழரசு கட்சி இது வரை எந்த முடிவு எடுக்கவில்லை யாரை ஆதரிப்பது என்பது தொடர்பாக உத்தியோகபூர்வமாக ஒரு முடிவெடுப்பார்கள் என்று நினைக்கின்றேன்.

என்னை பொருத்தமட்டில் ஆதரிப்பதாக இருந்தால் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கின்றேன் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை ஆனால் கட்சி ஒரு முடிவு எடுத்தால் கட்சி கூறுகின்ற விடயத்திற்கு நான் செவி சாய்ப்பது என்பது என்னுடைய முடிவு என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *