பேரவலத்தின் உச்ச சாட்சியே செம்மணி புதைகுழி: சீமான்

செம்மணி தமிழர் புதைகுழிகள் மனிதப்பேரவலத்தின் உச்சம்; சிங்கள இனவெறியர்களின் தமிழின அழிப்புக்கான மற்றுமொரு வரலாற்றுச் சான்று. உலக நாடுகள் இப்போதாவது மௌனம் கலைக்குமா? உரிய நீதியைப் பெற்றுத் தருமா? என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;  ஈழத்தாயகத்தின் வடக்குப் பகுதியில் யாழ்ப்பாணம் செம்மணி – சித்துப்பாத்தி இடுகாடு அருகே அண்மையில் குழந்தை உட்பட 5 தமிழர்களின் எலும்புக் குவியல்கள் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழி பெரும் அதிர்ச்சியையும். மிகுந்த மனவலியையும் தருகிறது.

1996ஆம் ஆண்டு செப்ரெம்பர் 7 அன்று சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி தேர்வெழுதிவிட்டு வீடு திரும்பும் வழியில் யாழ்ப்பாணம் காவலரணில் இருந்த 11 சிங்கள இனவெறி இராணுவத்தினரால் கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். அவரைத் தேடிச்சென்ற தாய் ராசம்மா, தம்பி பிரணவன், குடும்ப நண்பர் சிதம்பரம் கிருபாமூர்த்தி ஆகியோரும் கொல்லப்பட்டு நால்வரின் உடலும் அடுத்த நாள் வயல்வெளியில் புதையுண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஈழத்தமிழ் மக்களின் இதயத்தை நொறுக்கிய இக் கொடூர நிகழ்வால், பெரும் மனக்கொந்தளிப்பு டன் வீதிகளில் இறங்கித் தமிழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷாந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு, மரண தண்டனையை எதிர்கொண்ட இராணுவ வீரர்களில் ஒருவரான சோமரத்ன ராஜபக்ச இலங்கை நீதிமன்றத்தில் துணிச்சலுடன் அளித்த வாக்கு மூலத்தின் மூலமாகவே முதன் முதலாக செம்மணி மனிதப் புதைகுழிகள் வெளிச்சத்துக்கு வந்தன. அவரது வாக்குமூலத்தின்படி 1995 – 1996 வரையான ஆண்டுகளில் இலங்கை, இராணுவத்தினரால் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் தம்முடைய உயர் அதிகாரிகளால் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டனர் என்றும் பத்துக்கும் மேற்பட்ட புதைகுழிகளைத் தம்மால் அடையாளம் காட்டமுடியும் என்றும் தெரிவித்திருந்தார்.

இன்றைக்கும் ஈழத்தமிழ்ச் சொந்தங்களைத் தேடி அலைகின்ற காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவினர்களான, பல்லாயிரம் தமிழர்களில் பெரும்பான்மையோர் இப்படிச் சிங்கள இனவெறி இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்கள்தான் என்பது ஏற்றுக் கொள்ளமுடியாத துயரம் தோய்ந்த உண்மையாகும்.

மனிதப் புதைகுழிகள் குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தக்கோரி ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் முன்னெடுக்கும் அறப்போராட்டம் வெல்லட்டும் – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *