பெண்களின் ஆடைகளுடன் இரண்டு மனித சடல எச்சங்கள் மீட்பு!

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப்பணியின் போது இன்று பெண்களின் உள்ளாடைகளுடன் இரண்டு மனித சடல எச்சங்களும், இரு சன்னங்கள் உள்ளிட்ட சில தடயபொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் இரண்டாம் நாள் அகழ்வு இன்று முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இரண்டாம் நாள் அகழ்வுப் பணிகளில் இரண்டு மனித உடல்களின் மனித எச்சங்கள் பகுதியளவில் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு துப்பாக்கிச் சன்னங்கள், துப்பாக்கிச் சன்னங்கள் துளைத்த ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு தடையப் பொருட்களும் அகழ்வின்போது மீட்கப்பட்டுள்ளன.

குறித்த இரண்டாம் நாள் அகழ்வுப் பணி தொடர்பில் முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கே.வாசுதேவா கருத்துத் தெரிவிக்கையில்,

இரண்டாம் நாள் அகழ்வுப் பணிகளில் இரண்டு மனித உடல்களின் எச்சங்கள் பகுதியளவில் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச் சன்னங்கள் எனச் சந்தேகிக்கப்படும் இரண்டு உலோகத் துண்டுகளும் வேறு சில ஆதாரப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு பகுதி அளவில் இதுவரை எடுக்கப்பட்ட மனித எச்சங்களில் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டமைக்கான அடையாளங்கள் எவையும் இல்லை. இருப்பினும் மீட்கப்பட்ட ஆடைகளில் துப்பாக்கிச் சன்னங்கள் பட்டிருப்பதற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன.

எது எவ்வாறாயினும் இவற்றை விரிவாக ஆராய்ந்து, பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே இதுதொடர்பில் கூறமுடியும் என்றார்.

மேலும் குறித்த அகழ்வுப்பணி இடம்பெறும் இடத்தில் யாழ்ப்பாண மாவட்ட சட்டவைத்திய அதிகாரி, சட்டத்தரணிகளான கே.எஸ்.நிரஞ்சன், ரனித்தா ஞானராசா, தடையவியல் பொலிசார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூகசெயற்பாட்டாளர் அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன் உள்ளிட்டவர்களும் பிரசன்னமாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *