புரிந்துகொள்ளப்பட்டதும், புரிந்துகொள்ள படாததுமான அமித்ஷாவின் கூற்று!

பாரதிய ஜனதா கட்சியின் இரண்டாம் நிலை தலைவரும், உள்துறை அமைச்சருமான, அமித்ஷா, தெரிவித்திருந்த கருத்துக்கள் பலரது கவனத்தை பெற்றிருந்தது. கடந்த மாதம் 27ம் திகதி, இராமேஸ்வரத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில், ஈழத் தமிழ் மக்கள் பெருந்தொகையில் கொல்லப்பட்டதாக, அமித்ஷா கூறியிருந்தார். பாரதிய ஜனதா கட்சி, ஈழத் தமிழ் மக்கள் மீது இனப்படுகொலை இடம்பெற்றதை ஏற்றுக்கொண்டிருப்பதாக, சிலர் இதற்கு விளக்கமளிக்க முற்பட்டனர். சிலரோ, இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக கூறமுற்பட்டனர்.

இந்தக் கருத்து எவ்வாறானதொரு சூழலில் முன்வைக்கப்பட்டது என்பதை உற்றுநோக்க வேண்டும். தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தமிழ் நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதற்கான உக்திகள் திட்டமிடப்படும் சூழலில்தான், அமித்ஷா இவ்வாறானதொரு கருத்தை தெரிவித்திருக்கின்றார். அமித்ஷாவின் கருத்தை இன்னும் சற்று ஆழமாக நோக்கினால், தமிழ் நாட்டில், பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதற்காக பாடுபட்டுவரும், பாரதிய ஜனதாவின் தமிழ் நாட்டு தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாகவே அவ்வாறானதொரு கருத்தை முன்வைத்திருக்கின்றார். அண்ணாமலை சில தடவைகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருக்கின்றார். அண்மையில் இங்கிலாந்தில் புலம்பெயர் தமிழர்களோடு உரையாடியிருந்தார். பிரித்தானியாவை தளமாகக் கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள், அவருக்கு பெரிய வரவேற்றை வழங்கியிருந்தன. அதிகாரத்திலிருக்கும் பாரதிய ஜனதா கட்சியுடன் நெருங்கினால், இந்தியாவின் ஆசிர்வாதத்தை பெறலாமென்னும் புரிதலொன்று தமிழ்ச் சூழலில் ஒரு பார்வையாக இருக்கின்றது. அதற்காக சிலர், தங்களது புரிதலுக்குட்பட்ட முயற்சிகளையும் மேற்கொண்டுவருகின்றனர். அண்ணாமலைக்கான வரவேற்பின் பின்னணியும் இதுதான்.

பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரையில், ஈழத் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்கு, அப்போது ஆட்சியிலிருந்த, காங்கிரஸ் கட்சியும், அதனுடன் கூட்டுவைத்திருந்த திராவிட முன்னேற்றக்கழகமும்தான் காரணம். இந்தக் கருத்தைததான் அமித்ஷா, இராமேஸ்வரத்தில் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த இடத்தில் அமித்ஷாவின் கருத்தை முன்னிறுத்தி சிந்திக்க முற்படுவோர், திராவிட முன்னேற்றக் கழக்கத்தின் மீதான குற்றச்சாட்டை எவ்வாறு நோக்கப் போகின்றனர்? அதனை ஏற்றுக்கொள்கின்றனரா – அல்லது நிராகரிக்கின்றனரா? ஏற்றுக்கொண்டால், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிர்நிலையிலேயே நிற்க வேண்டிவரும். ஏனெனில், பாரதிய ஜனதா கட்சியின் ஈழத் தமிழர் ஆதரவு நிலையென்பது, மிகவும் தெளிவாக, காங்கிரஸ் மற்றும் திராவிட முன்னேற்றக்கழகத்திற்கு எதிரானது.

இந்தியாவை பொறுத்தவரையில் பாரதிய ஜனதா கட்சி மிகவும் செல்வாக்குமிக்க கட்சி. பாரதிய ஜனதா கட்சியை சவாலுக்குள்ளாக்கக் கூடிய வகையில் பிறிதொரு தனிக்கட்சி இல்லை. காங்கிரஸ் பிராதான கட்சியாக இருந்தாலும் கூட, ஒப்பீட்டடிப்படையில் பலவீனமாகவே இருக்கின்றது. இந்த நிலையில்தான், நடைபெறவுள்ள தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து, இந்தியா என்னும் ஒரு கூட்டை உருவாக்கியிருக்கின்றனர். இந்தப் பின்புலத்தில், ஒப்பீட்டு அடிப்படையில், பாரதிய ஜனதா கட்சி நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கின்றது. கடந்த தேர்தலில் வெற்றிபெற்றது போன்று, இம்முறை, பாரிய வெற்றியை பெற முடியாதென்னும் கணிப்புக்கள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் நாட்டை ஆளும் திராவிட முன்னேற்றக்கழகம், இந்தியா கூட்டில் முக்கிய பங்காளியாகும். இந்த பின்புலத்தில்தான், ஈழத் தமிழரின் கண்ணீருக்கு இவர்கள் பதில் கூறவேண்டுமென்னும் பிரச்சாரத்தை பாரதிய ஜனதாவின் தமிழ் நாட்டு தலைமை கையிலெடுத்திருக்கின்றது.

இது ஈழத் தமிழ் மக்களுக்கு சாதகமானதா? சாதகம்தான். இந்தியாவின் செல்வாக்குமிக்க கட்சி. அதே வேளை, பெரும்பாண்மையான இந்து மக்களின் ஆதரவை பெற்றிருக்கும் கட்சியொன்றின் இரண்;டாம் நிலைத் தலைவர், இவ்வாறானதொரு கருத்தை கூறுகின்றார் என்றால், அது சாதகமான விடயம்தான். ஆனால் பெருந்தொகையில் கொலையை எதிர்கொண்ட மக்கள் கூட்டமொன்றிக்கான நீதியென்ன என்பதுதான் இந்த இடத்தில் எழும் கேள்வி? அந்த நீதி தொடர்பில் பாரதிய ஜனதா கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்ன என்பதுதான் கேள்வி?

ஈழத் தமிழருக்கான அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன, என்பது இரகசியமான ஒன்றல்ல. அதே வேளை, ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களின் போது, இந்தியா எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கின்றது என்பதும் இரகசியமானதல்ல. இது தொhடர்பான கேள்விக்கு, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.ஜெயசங்கள் பதிலளித்திருக்கின்றார். அதாவது, இலங்கையை நாங்கள், இன அடிப்படையில் நோக்குவதில்லை. இலங்கை என்னுமடிப்படையிலேயே விடங்களை அணுகுகின்றோம். இது எமது நிலைப்பாடு மட்டுமல்ல – மாறாக, முன்னைய அரசாங்கங்கள், இலங்கை தொடர்பில் எவ்வாறான கொள்கை நிலைப்பாட்டை கொண்டிருந்தனவோ, அதனையே, பாரதிய ஜனதா கட்சியும் தொடர்கின்றது. இந்தக் கூற்றோடு, அமித்ஷாவின் கருத்தை தொடர்புபடுத்தினால், ஷாவின் கருத்துக்கள் முற்றிலும் உள்நாட்டு அரசியலை எதிர்கொள்ளும் உபாயத்துடன் தொடர்புபடுவதை நாம் காணலாம்.

ஈழத் தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் கொள்கை நிலைப்பாடு இதுவரையில் 13வது திருத்தச்சட்டத்தை தாண்டிச் செல்லவில்லை. பிரதமர் மோடி, கூட்டுறவு சமஸ்டியின் மீதான ஈடுபாட்டை வெளிப்படுத்தியிருந்தாலும் கூட, அவர் தனது பார்வையின் அடிப்படையாக, இந்தியாவில் தற்போது நடைமுறையிலிருக்கும் மானில ஆட்சி முறைமையே சுட்டிக்காட்டுகின்றார். ஆனால் இலங்கை விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு, இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டது. அதன் விளைவான 13வது திருத்தச்சட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. இதனை புரிந்துகொண்டுதான், அமித்ஷாவின் கூற்றை உற்றுநோக்க வேண்டும். இந்தியா 13வது திருத்தச்சட்;டத்தை வலியுறுத்தினால், ஈழத் தமிழ் மக்கள் இந்தியாவிலிருந்து விலகிச் செல்வார்கள், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஈழத் தமிழரில்தான் தங்கியிருக்கின்றது – இப்படியெல்லாம் கூறி, நம்மவர்கள் சிலர், சுயதிருப்தி கொண்டாலும் கூட, இந்தியாவின் அடிப்படையான நிலைப்பாட்டில் மாற்றங்கள் இல்லை. வல்லரசுகளின் அயலுறவுக் கொள்கை பிராந்தியரீதியில் மற்றும் உலகளவில் ஏற்படும் அரசியல் மாறங்களினால் மட்டுமே நிகழ முடியும். அவ்வாறான சூழலில், இந்தியாவே, அதன் நிலைப்பாட்டை மாற்றியமைக்கும். இந்திராகாந்தி காலத்து இந்தியாவின் அணுகுமுறை அவ்வாறான ஒன்றுதான்.

அதே வேளை, நாடுகளின் அணுகுமுறையை நோக்குகின்ற போது, அரசுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை உற்றுநோக்க வேண்டும். தமிழ்ச் சூழலில் இந்த விடயத்தை புரிந்துகொள்வதிலும் தெளிவின்மை காணப்படுகின்றது. அரசாங்கத்தை பிரதிநித்துவப்படுத்துவர்கள், தேர்தல்களின் போது, தங்களின் ஆட்சியை தக்கவைப்பதற்காக பல்வேறு வாக்குறுதிகளை வழங்குவார்கள், பல கருத்துக்களை முன்வைப்பார்கள். ஆனால் அரசுக்கான அணுகுமுறை ஒன்றுண்டு. கொள்கை நிலைப்பாட்டை முன்னெடுப்பதில் அரசே முதன்மையானது. சிறிய நாடுகளில் வேண்டுமானால், அரசாங்கங்கள் தங்களின் விருப்பங்களுக்கு ஏற்ப, சில தீர்மானங்களை நிறைவேற்ற முடியும். ஆனால், பெரிய நாடுகளின் கொள்கை நிலைப்பாட்டில் சாதாரணமாக ஒரு போதும் மாற்றங்கள் ஏற்படுவதில்லை. இதனால்தான், வெளிவிவகாரக் கொள்கையை ஒரு தொடர் நிகழ்வென்பார்கள். இந்த தொடர் நிகழ்வில் பிரதமர்கள் எவராகவும் இருக்கலாம் ஆனால் அவர்கள் நினைத்தவுடன் கொள்கை நிலைப்பாடு மாறிவிடாது.

இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யும் பலம்பொருந்திய நாடுகள் அனைத்தும், இலங்கையின் ஆட்சியதிகாரத்தை தீர்மானிக்கும் பெரும்பாண்மை மக்களை அடிப்படையாகக் கொண்டே, தங்களின் கொள்கை முடிவுகளை மேற்கொள்கின்றனர். இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. அமெரிக்காவும் விதிவிலக்கல்ல. இந்திராகாந்தி காலத்தில் மட்டும்தான், இந்தியா தமிழ் மக்களுக்கு பிரத்தியேக முக்கியத்துவத்தை வழங்கியிருந்தது. அன்றிருந்த அரசியல் சூழலே அதற்கு காரணம்;. குறிப்பாக ஜே.ஆர்.ஜெயவர்த்தன இந்தியாவிற்கு எதிர்நிலையில் பயணிக்க முற்பட்டதன் காரணமாகவே அவ்வாறானதொரு சூழல் உருவாகியது.

அவ்வாறானதொரு சூழல் ஏற்பட்டால் இந்தியா மீளவும் கடுமையான தீர்மானங்களை நிச்சயம் எடுக்கும். 1987இன் அனுபவங்களுக்கு பின்னர், தென்னிலங்கையின் ஆட்சியாளர்கள் இந்த விடயத்தில் கவனமாகவே செயற்பட்டுவருகின்றனர். மகிந்த ராஜபக்சவின் சீன சார்பு நிலைப்பாட்டால் இந்தியா அதிருப்தியுற்றாலும் கூட, நிலைமைகள் இந்தியாவின் கட்டுப்பாட்டை மீறி, அதிகம் சென்றுவிட்டதாக கூறிவிட முடியாது. பாதுகாப்பு விடயங்களில் சிக்கலான நிலைமை உருவாகினால் மட்டுமே இந்தியா கடுமையான தீர்மானங்களுக்கு செல்ல நேரிடும்.

அமித்ஷாவின் கருத்துக்களில் புளகாங்கிதம் அடைய ஒன்றுமில்லை. அதே வேளை, இந்தியாவின் ஆளும் தரப்போடு தொடர்புகளை பேணிக் கொள்வதற்கான வாய்ப்புக்களை பயன்படுத்திக்கொள்வதிலும் தவறில்லை. ஆனால் வெறுமனே, அவர்களது தேர்தல் தந்திரோபாயங்களுக்கான துருப்புச் சிட்டாக மட்டும் சுருங்கிப் போகாத வகையிலும் எமது நகர்வுகள் அமைய வேண்டும். தமிழ் நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கை நிலைநிறுத்தும் முயற்சியில்தான், பாரதிய ஜனதா கட்சி தற்போது, ஈழத் தமிழர் பக்கம் திரும்பியிருக்கின்றது. பாரம்பரியமாக தமிழ் நாட்டின் ஈழ ஆதரவு கட்சிகளாக திராவிட கட்சிகள் மட்டுமே இருந்திருக்கின்றன. பாரதிய ஜனதா கட்சி, இதில் ஒரு உடைவை ஏற்படுத்த முயற்சிக்கின்றது. திராவிட கட்சிகள், தற்போதைய சூழலில் மத்தியில் செல்வாக்குச் செலுத்த முடியாத நிலையிலிருக்கின்றன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துவதன் மூலம், இதுவரையில் திராவிட கட்சிகள் வசமிருந்த, ஈழ ஆதரவுக் கரிசனையை, தமிழ் நாட்டு பாரதிய ஜனதா கட்சியின் கட்டுப்பாட்டு;க்குள் கொண்டுவருவதற்கான முயற்சியில் அண்ணாமலை கடுமையாக உழைக்கின்றார். இதன் காரணமாகவே, தங்களின் தமிழ் நாட்டுக்கான தேர்தல் பிரச்சார திட்டத்தில், ஈழத் தமிழ் அவலத்தை பிரதான பேசு பொருளாக்கியிருக்கின்றனர். ஈழத் தமிழ் செயற்பாட்டாளர்கள் நிலைமையை நிதானமாக கையாள வேண்டும். அனைவரும் நமக்குத் தேவையென்று சிந்திக்க வேண்டும். ஏனெனில் எமது உறவு இந்தியாவுடனானது.

யதீந்திரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *