புதிய அரசியல் பயணத்தை பாதுகாத்து அதனை முன்னோக்கி கொண்டு செல்ல அனைவரும் தனிநபர் மற்றும் கட்சி சார்பின்றி நாட்டை முதன்மைப்படுத்தி பொதுவான இணக்கப்பாட்டுடனும், அர்ப்பணிப்புடனும் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணி விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று (30) மாத்தறை கோட்டை விளையாட்டரங்கில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
இந்த மக்கள் சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவிக்கையில், இன்றைய தினம் புதிய அரசியல் பயணத்தின் ஆரம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டை முன்னிறுத்தி கட்சி அரசியலை விட்டு விலகி இந்த வேலைத் திட்டத்தில் இணையுமாறு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி, அனைவரையும் ஒன்றிணைத்து நாட்டை எவ்வாறு கட்டியெழுப்புவது என்ற பாடத்தை அந்த சமயம் தன்னிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.
மேலும்,
மூழ்கவிருந்த கப்பலை என்னிடம் ஒப்படைத்ததாக அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ கூறினார். ஆனால், என்னிடம் டைட்டானிக் கப்பல் ஒன்றே ஒப்படைக்கப்பட்டது. அதனை நான் தற்போது துறைமுகத்திற்குக் கொண்டுவந்திருக்கிறேன். இருந்த மாலுமிகள் அனைவரும் தப்பியோடிவிட்டனர்.பனிப் பாறைக்குப் பயந்து அதனைப் பொறுப்பேற்க யாரும் இருக்கவில்லை. கப்பல் மூழ்கி நாம் பலியாவதா? அல்லது கரையொதுங்குவதா என்ற கேள்வியே இருந்தது. நாம் தற்போது துறைமுகத்தை வந்தடைந்துள்ளோம். இந்தக் கப்பலுடன் நாம் என்ன செய்யப் போகிறோம். இந்தக் கப்பலைத் திருத்திக் கொண்டு இன்னும் 50 – 100 வருடங்களுக்குப் பாதுகாப்பாக பயணிக்கப் போகிறோமா? அல்லது தப்பியோடி மாலுமி ஒருவரிடம் கப்பலை ஒப்படைப்பதா என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.
நான் இந்த இடத்திற்கு வரும்போது மாத்தறை மக்கள் இரண்டு வருடங்களுக்கு முன்னர் சந்தித்த துயரங்கள் நினைவுக்கு வந்தது. 2022ஆம் ஆண்டு தமிழ், சிங்களப் புத்தாண்டில் நான் மாத்தறை, கம்புறுகமுவ பிரதேசத்தில் இருந்தேன். நான் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையமொன்று இருந்தது.
அங்கு மிக நீண்ட வரிசையில் வாகனங்கள் இருந்தன. மக்கள் பெரிதும் துன்பப்பட்டனர். தமிழ், சிங்கள புத்தாண்டு சுப வேளையிலும் எரிபொருளுக்காக மக்கள் வரிசையில் காத்திருந்தனர். என் வாழ்நாளில் இவ்வாறான சம்பவங்களை இதற்குமுன்னர் ஒருபோதும் பார்த்ததில்லை. ஆண், பெண் பாகுபாடின்றி மக்கள் வரிசையில் இருந்தனர். ஒருநாள் அவர்கள் முட்டி மோதிக் கொண்டனர்.
அவ்வாறான ஒரு நிலை மீண்டும் இந்த நாட்டில் ஏற்பட இடமளிக்க முடியாது என்று நான் தீர்மானித்தேன். இந்தச் சந்தர்ப்பத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானியுடன் பேசியிருந்தேன், உலக வங்கியின் அதிகாரிகளின் பதிலை அப்போதைய ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்தேன். அவற்றை நடைமுறைப்படுத்துமாறு கேட்டிருந்தேன். எவ்வாறாயினும், இறுதியில் எனக்கு இதனைப் பொறுப்பேற்க நேரிட்டது. உலக வரலாற்றில் புதிய முறையில் நான் இதனை பொறுப்பேற்றேன். அனைவரும் தப்பியோடிய பின்னர், எனக்குப் பொறுப்பேற்குமாறு கூறினார்கள்.
அரசியலமைப்பின் படி பிரதமர் பதவி விலகினால், ஆளும் கட்சிக்கு அதிகாரத்தைப் பொறுப்பேற்க முடியாவிட்டால், எதிர்க்கட்சி அதனைப் பொறுப்பேற்க வேண்டும். விசேடமாக ஆளும் கட்சியின் ஆதரவு இருந்தது. ஆனால் அனைவரும் தப்பியோடினர். பொறுப்பேற்க யாரும் முன்வரவில்லை அதனால் பதவியை பொறுப்பேற்க முடியுமா என்று என்னிடம் கேட்டனர். அவ்வாறான நிலையே அன்று இருந்தது. எங்களின் பொருளாதார முறைமை மட்டும் அன்று உடைந்துவிழவில்லை. எமது அரசியல் முறைமையும் உடைந்துவிட்டது. எவ்வாறாயினும், நான் பொறுப்பேற்றுக்கொண்டேன். ஜூலை 9ஆம் திகதி ஜனாதிபதி பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டேன். இது வெற்றியடையாது என்று அனைவரும் கூறினார்கள். ஆனால் இந்த நாட்டு மக்கள் மீது எனக்கு நம்பிக்கை இருந்ததுடன், என் மீதும் எனக்கு நம்பிக்கை இருந்தது.
ஐ.எம்.எப் உடன் பேச்சு நடத்தினேன். இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் நிதியுதவி வழங்கியிருந்தன. முதல் பணியாக விவசாயத்தில் கவனம் செலுத்தினோம். 2023ஆம் ஆண்டு சிறுபோகத்தை வெற்றிகரமாக செய்துமுடிக்குமாறு கேட்டுக் கொண்டோம். எமது விவசாயிகள் அதனைச் செய்தார்கள். எமது உற்பத்தியில் பெரும் பகுதியில் விவசாயமே பங்காற்றியது. 2023ஆம் ஆண்டு பெரும்போகமும் வெற்றியளித்தது. 2023 – 2024 சிறுபோகமும் வெற்றியளித்தது. 2024ஆம் ஆண்டு பெரும்போகமும் வெற்றியளித்தது. இதனால், சித்திரைப் புத்தாண்டு, வெசாக், பொசொன், தன்சல் ஆகியவற்றை இவ்வாறு கொண்டாடுவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. தெற்கு மக்களும் உதவினார்கள். இரண்டாவதாக, சுற்றுலாத் துறை வளர்ச்சியை ஏற்படுத்தினோம். இஸ்ரேல், உக்ரெய்ன், ரஸ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை இங்கு வருவதற்கு ஊக்கமளித்தோம். இதன்மூலம் எமக்குத் தேவையான அந்நியச் செலாவணி கிடைத்தது. வெளிநாட்டுப் பணியாளர்கள் மூலம் இன்னுமொரு பகுதி கிடைத்தது. இவற்றின் மூலமே நாம் இதனை முன்னேற்றினோம். பிரச்சினைகள் இருந்தன.