பிரித்தானியாவில் நாளை (ஜூலை 4 -ம் திகதி) நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
பிரித்தானியாவில் தற்போது பிரதமராக ரிஷி சுனக் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், அங்கு ஜூலை 4 -ம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.
அங்கு மொத்தம் 650 தொகுதிகள் உள்ள நிலையில் எந்த கட்சி 326 இடங்களில் வெற்றி பெருகிறதோ அந்த கட்சியே ஆட்சி அமைக்கின்ற அதிகாரத்தை பெறும்.
ஆனால், எந்த கட்சியும் 326 இடங்களில் வெற்றிப்பெறவில்லை என்றால், தொங்கு நாடாளுமன்ற நடைமுறை பின்பற்றப்படும். அதாவது பிரதமர் பதவியில் நீடிக்கும் நபருக்கே முதலில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படும்.
இந்த தேர்தலில் சென்னை கொளத்தூரைஸ்ரீ பூர்வீகமாக கொண்ட ஆனந்த் குமார் என்ற தமிழர் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் உறவுகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “பிரிட்டன் நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிடும் என்னருந்தமிழ் உறவுகளுக்கு வெற்றி வாழ்த்துகள்!
ஜூலை 04 அன்று நடைபெறவிருக்கும் வாக்குப்பதிவில், என் உயிர்க்கினிய பிரிட்டன் வாழ் தமிழர்கள் அனைவரும், வரலாறு தந்துள்ள இப்பெரும் வாய்ப்பைத் தவறவிடாது பயன்படுத்தி நமது உறவுகளை வெற்றிபெறச் செய்து தமிழ்ப்பேரினத்தின் ஓர்மையையும், வலிமையையும் இவ்வுலகிற்கு எடுத்துக்காட்டுங்கள்!
மறக்காமல் வாக்குச்செலுத்துங்கள்! நாம் மானத்தமிழர் என்பதை உலகிற்குக் காட்டுங்கள்!இலக்கு ஒன்றுதான்; இனத்தின் விடுதலை! இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்! நாம் தமிழர்!” என்று கூறியுள்ளார்.