பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் மண்ணன் அல்லது மணல்வாரி (measles) என்னும் நோய்த்தொற்று அதிகம் பரவி வரும் நிலையில், அயர்லாந்தில் ஒருவர் இந்நோய்த்தொற்றுக்கு பலியாகியுள்ள விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மண்ணன், காசநோய், காலரா, டைபாய்டு, சின்னம்மை போன்ற நோய்கள், விக்டோரியா யுக நோய்கள் என அழைக்கப்படுபவை ஆகும். அந்த நோய்கள் தற்போது மீண்டும் சில நாடுகளில் தலைதூக்கத் துவங்கியுள்ளன.
அவ்வகையில், இந்த Measles என்னும் நோய் தற்போது வேகமாக பரவிவருகிறது. இந்நிலையில், அயர்லாந்தில் முதன்முறையாக இந்த தொற்றுக்கு ஒருவர் பலியாகியுள்ளார். பொதுவாக குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என கருதப்படும் மணல்வாரித் தொற்றுக்கு, வயது வந்த ஒருவர் பலியான விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், இந்த மணல்வாரித் தொற்று தொடர்பிலான ஐந்து அறிகுறிகளைக் கவனித்துக்கொள்ளுமாறு பிரித்தானியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
மணல்வாரி என்பது அதிகமாக பரவக்கூடிய ஒரு தொற்று நோயாகும். அது கடுமையான உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். அது வெறும் சிவப்புப் புள்ளிகளை உருவாக்குவதுடன் நின்றுவிடுவதில்லை, மணல்வாரித் தொற்றை ஏற்படுத்தும் வைரஸ், உடல் முழுவதும் பரவி கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
மணல்வாரித் தொற்று தொடர்பிலான ஐந்து அறிகுறிகள்:
அதிக காய்ச்சல்
மூக்கில் நீர் வடிதல் அல்லது மூக்கடைப்பு
தும்மல்
இருமல்
சிவந்த கண்கள் மற்றும் கண்களில் நீர் வடிதல்
இந்த அறிகுறிகள் போக, இன்னும் இரண்டு அறிகுறிகளையும் கவனித்துக்கொள்ளவேண்டும் என பிரித்தானிய மருத்துவ அமைப்பு மக்களை எச்சரிக்கிறது. அவையாவன, உடலில் சிவப்புப் நிறப் புள்ளிகள் தோன்றும் முன், பொதுவாக ஜலதோஷம் போன்ற அறிகுறிகள் தோன்றிய சில நாட்களுக்குப் பிறகு, கன்னங்கள் மற்றும் உதடுகளின் பின்புறத்தில் தோன்றும் சிறிய வெள்ளைப் புள்ளிகள் ஆகும்.
இந்த சிவப்பு நிறப் புள்ளிகளைப் பொருத்தவரை, அவை முதலில் முகத்திலும் காதுகளுக்குப் பின்னாலும் தோன்றி, பின் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவும் என்பது குறிப்பிடத்தக்கது.