ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக முஜிபுர் ரஹ்மான் சபாநாயகர் முன்னிலையில் இன்று (10) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
டயானா கமகே எம்.பியின் பதவி நீக்கத்தினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே முஜிபுர் நியமிக்கப்பட்டார். முன்னதாக கொழும்பு மாநகர சபை மேயர் பதவிக்கு போட்டியிட, தனது எம்.பி பதவியை முஜிபுர் இராஜினாமா செய்திருந்தார்.
2014 மேல் மாகாணசபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று மேல் மாகாணசபை உறுப்பினரானார். பின்னர் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு முதல் தடவையாகத் தெரிவு செய்யப்பட்டார்.
2020 இல் இவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்.
எவ்வாறாயினும் டயானா கமகேவிடம் இருந்து வெற்றிடமாகவுள்ள உறுப்பினர் பதவிக்கு பொருத்தமான பெண் ஒருவரை நியமிக்குமாறு இலங்கை மகளிர் பாராளுமன்ற உறுப்பினர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதன் தலைவி, நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.