வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச துறையில் நியமனம் வழங்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (2) செவ்வாய்க்கிழமை திருகோணமலையில் இடம்பெற்றது.
இதனைத் திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது.
திருகோணமலை உள்துறை முக வீதியில் உள்ள கிழக்கு மாகாண சபை வீதியிலிருந்து கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் வரை நடை பவனியாகப் பதாகைகளை ஏந்தியவாறு கடும் வெயிலில் பலர் குழந்தைகளுடன் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
பேச்சுவார்த்தை போதும் இனி நியமனத்தை வழங்கு போன்ற பல வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சம் இன்றி தொழிலை வழங்கு என்ற பிரதான வாசகம் ஊடான கோசங்களை இதன் போது எழுப்பினர்.
இதன் போது கிழக்கு ஆளுநர் செயலக முன்றலில் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். அத்துடன் ஆளுநர் செயலகத்தில் மகஜரையும் கையளித்தனர். இதில் நூற்றுக்கணக்கான வேலையற்ற பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.