மக்கள் பிரதிநிதிகளை பாடசாலைகளுக்கு அழைத்துவருவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.
கல்வி அமைச்சின் அனைத்து பிரிவு அதிகாரிகளுடன் நேற்று (26) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை, புலமைப்பரிசில் வினாத்தாள் வெளியானமையினால் சிறுவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இங்கு தெரிவித்தார்.
குறிப்பாக, வெளியான வினாக்கள் தொடர்பில் சுயாதீன நிபுணர்களின் பங்களிப்புடன் முழுமையான விசாரணை அறிக்கையை தயாரித்து தனது கவனத்திற்கு கொண்டு வருமாறும் பிரதமர் இங்கு ஆலோசனை வழங்கினார்.
அவர் இங்கு மேலும் தெரிவிக்கையில்,
பாடசாலை கல்வியை மேம்படுத்துவது தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். எமது அரசாங்கத்தின் கீழ் கல்விக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ளோம். கல்வி அமைச்சு மற்றும் பரீட்சை திணைக்களம் தொடர்பில் மக்கள் மத்தியில் எழுந்துள்ள அவநம்பிக்கையை களைவதற்கு இந்த நிறுவனங்கள் செயற்பட வேண்டும். குறிப்பாக, பரீட்சைகள் நடத்துதல் மற்றும் பெறுபேறுகளை வழங்குதல் ஆகியவற்றை விரைவுபடுத்த வேண்டும்.
ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவது முறையான நடைமுறையின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும். மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் வெற்றிடங்கள் வெளிப்படைத் தன்மையுடன் நிரப்பப்பட வேண்டும். பாடசாலை தரப்பிலிருந்து எனக்கு ஒரு சிறிய யோசனை உள்ளது. ஒரேயடியாக அதனைச் செய்ய முடியாவிட்டாலும், மனநலப் பிரச்சினைகள் குறித்து பாடசாலைகளில் இருந்து எனக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த விடயத்தில் நாம் தலையிட வேண்டும். ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த தலைமுறையினர் கொவிட் நோயை எதிர்கொண்டவர்கள். பொருளாதார வீழ்ச்சியால் ஏற்பட்ட உள்நாட்டு பிரச்சினைகளையும் அவர்கள் எதிர்கொண்டனர். இவை அனைத்தையும் சேர்ந்த ஒரு தலைமுறையினர். இந்த தலைமுறையினரிடம் குடும்ப பிரச்சினைகள், ஆசிரியர்களுடன் தொடர்பில்லாத பிரச்சினைகள் காணப்படுகின்றன.