பழைய முறைக்கு திரும்பியது இலங்கை விசா நடைமுறை!

பாரிய சிக்கலாக மாறி இருந்த விசா பெற்றுக்கொள்ளும் பிரச்சினைக்கு கடந்த 24 மணித்தியாலங்களில் தீர்வு வழங்க அரசாங்கம் செயற்பட்டுள்ளதாகவும், அதன்படி நேற்று நள்ளிரவு 12.00 மணி முதல் பழைய முறைப்படி அனைத்து வெளிநாட்டவர்களும் விசா பெற்றுக் கொள்ள முடியும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் விஜித ஹேரத் விடுத்துள்ள முழுமையான அறிக்கை வருமாறு,

VFS நிறுவனத்துக்கு விசா வழங்கும் வசதி வழங்கப்பட்டதால், மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். குறிப்பாக இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் விசா பெறுவதில் சிக்கல் நிலையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் தலையீட்டால், நீதிமன்றத் தீர்ப்பின்படி, கடந்த 24 மணி நேரத்திற்குள், பழைய முறைப்படி விசா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று நள்ளிரவு 12.00 மணி முதல் எளிதாக விசா பெற்றுக்கொள்ள முடியும்.

வெளிநாட்டிவர்கள் இப்போது ஒன்லைனில் விசா பெறுவதற்கு எளிதாக விண்ணப்பிக்கலாம். இன்று நள்ளிரவு 12 மணிக்கு இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள் விசா வழங்கப்படும்.

விசா பிரச்சினை பெரும் மன உளைச்சலை ஏற்படுத்திய பிரச்சினையானது. தற்போது அந்தப் பிரச்சினையைத் தீர்த்துவிட்டோம். இது தொடர்பாக சட்ட மா அதிபரிடம் ஆலோசனை பெற்றோம். நீதிமன்ற தீர்ப்பின்படி நாம் உடனடியாக செயல்பட்டோம்.

மேலும், VFS நிறுவனத்திற்கு இதனை வழங்கியதால் ஏற்பட்ட முறைகேடு குறித்து உடனடியாக தடயவியல் கணக்காய்வை மேற்கொள்ள ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளோம். அந்தக் கணக்காய்வின் மூலம் இந்த கொடுக்கல் வாங்கலில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்கப்பட்டு எதிர்வரும் நாட்களில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அதன்படி, வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறையில் இருப்பவர்களும் தற்போது இந்த வசதியைப் பெறுவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *