பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்து பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை முன்வைப்பதற்காக சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலம் 2023ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள குறித்த சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒருசில பிரிவுகள் தொடர்பாக ஆர்வம் காட்டுகின்ற பல தரப்பினர்களால் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்களைக் கருத்தில் கொண்டு அச்சட்டமூலத்துக்கு தேவையான திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக இது தொடர்பில் ஆர்வமுள்ளவர்களிடம் முறையான கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் கோரியதுடன், நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர் சில தரப்பினருடன் கலந்துரையாடினார்.
அதேசமயம், சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை கருத்தில் கொண்டு, அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அசல் சட்டமூலத்தை திருத்தியமைத்து, சட்டவரைஞரால் புதிய சட்டமூலத்தை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த புதிய சட்டமூலத்துக்கு சட்டமா அதிபரின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.