தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபராக செயற்படுவதற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு விதித்துள்ள நிலையில், பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிக்க முடியுமா? முடியாதா? என்பது தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட கடும் தர்க்கத்தினால் சபையில் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக அமளி துமளி ஏற்பட்டது.
பொலிஸ்மா அதிபர் பதவி விலக்கப்படவோ, பதவி விலகவோ இல்லையென்றும் இதனால் பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்க முடியாது என்று ஆளும் கட்சியினர் கூறியதுடன், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மதிப்பளித்து பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர்.பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்க ஜனாதிபதிக்கு முடியாவிடின் அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்ட கருத்துக்கு ஆளும் தரப்பு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியது.
பொலிஸ்மா அதிபர் தொடர்பாக உயர்நீதிமன்றதால் விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தரவு தொடர்பில் பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை பிரதமர் தினேஷ் குணவர்தனவின் நிகழ்த்திய விசேட உரையை தொடர்ந்து ஆளும் மற்றும் எதிர் இரு தரப்பினருக்கும் இடையே கடும் தர்க்கம் ஏற்பட்டது.
பிரதமர் விசேட உரையாற்றும் போது கூறுகையில்;
ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் உயர்நீதிமன்றத்தினால் பொலிஸ்மா அதிபர் விடயத்தில் உயர்நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு வழங்கி தீர்ப்பை வழங்கும் போது தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கருத்துக்கள் கேட்கப்படவில்லை.
ஜனாதிபதி நினைத்தபடி பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்கவும் முடியாது. பொலிஸ் மா அதிபர் பதவி இன்னமும் அப்படியேதான் இருக்கிறது. பாராளுமன்றம் தான் அரசியலமைப்பு பேரவைக்கு பொறுப்பு.வேறு யாரும் அதற்கு வியாக்கியானம் கொடுக்க முடியாது. அரசியலமைப்பு சபையின் செயற்பாடுகளை நீதிமன்றத்தாலும் சவாலுக்கு உட்படுத்த முடியாது. இதனால் பொலிஸ் மா அதிபர் மீதான உயர்நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை செல்லுபடியாகாது என்று கூறினார்.
இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரதமரின் கருத்தை எதிர்த்து கடும் தர்க்கத்தில் ஈடுபட்டனர். இதனால் சபையில் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக இந்த விடயம் தொடர்பில் சர்ச்சை நிலவியது.
பிரதமரின் உரையை தொடர்ந்து அடிப்படை உரிமைகள் தொடர்பில் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கருத்துக்களை முன்வைத்தார்.
அடிப்படை உரிமைகள் தொடர்பில் உயர்நீதிமன்றத்திற்கு தீர்மானம் எடுக்க முடியும். இதன்படி உயர்நீதிமன்றம் பொலிஸ்மா அதிபர் விடயத்தில் இடைக்கால தடையுத்தரவை வழங்கியுள்ளது. இதற்கமைய பதில் பொலிஸ்மா அதிபர் நியமிக்க கோரப்பட்டுள்ளது. இந்நிலையில் தமக்கு பாதிப்பான தீர்ப்புகள் வரும் போது அதனை ஏற்காதிருக்க முடியாது. சபாநாயகர் இந்த விடயத்தில் முறையாக அறிவுப்பூர்வமாக சிந்திக்க வேண்டும்.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி தீர்மானங்களை எடுத்தால் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிடும். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி ஜனாதிபதி நடந்துகொள்ள வேண்டும். அதனை மீறி நடந்துகொள்ள முடியாது. தீர்ப்பை ஏற்க முடியாது என்று கூறவும் முடியாது. அத்துடன் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் சிவில் உடையில் பாதுகாப்பு அமைச்சுக்கு சென்று பொலிஸை நிர்வாகம் செய்கின்றார். இதனை சரியென கூற முடியாது. இது முற்றிலும் தவறாகும் என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்ட கருத்துக்களுக்கு எதிராக ஆளும் கட்சி தரப்பினர் எதிர்ப்பு வெளியிட்டு அவர் பேசும் போது கூச்சலிட்டு இடையூறுகளை ஏற்படுத்தினர்.
இவ்வேளையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன்,ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து, எதிர்க்கட்சித் தலைவர் தவறான கருத்தை முன்வைக்கின்றார். பொலிஸ்மா அதிபர் சிவில் உடையில் பாதுகாப்பு அமைச்சுக்கு சிவில் உடையில் வந்துள்ளார் என்று கூறுவது முற்றிலும் பொய்யாகும் என்றார்.
இதன்போது தொடர்ந்தும் தனது கருத்தை முன்வைத்த எதிரக்கட்சித் தலைவர், ரோயல் கல்லூரி மாணவர்கள் இப்போது இந்த சபையில் நடப்பவற்றை நேரடியாக பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். இங்கே பிரதமர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காது கதைப்பது அந்த கல்லூரியின் பழைய மாணவர் என்ற ரீதியில் அவர் வெட்கப்பட வேண்டும் என்றார்.
இவ்வேளையில் எழுந்த எதிர்க்கட்சியின் சுயாதீன அணி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கூறுகையில், இந்த சபையில் அரசியலமைப்பு சபை நிறைவேற்றுத் துறைக்கு சொந்தமானது என்று இந்த பாராளுமன்றத்தில் ஒருவர் கூறும் போது பிரதமர் கூறும் போது அது பாராளுமன்றத்திற்கு உரியது என்று கூறுகின்றார். இதில் எது சரியானது. இந்தப் பிரச்சினையை முதலில் தீர்க்க வேண்டும் என்றார்.
இதனை தொடர்ந்து எதிர்க்கட்சியின் சுயாதீன உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, உயர்நீதிமன்ற நீதியரசர்கள் நியமன விடயத்தில் தடையுத்தரவு வழங்கி விதிக்கப்பட்டுள்ள தடையுத்தரவு தொடர்பில் இது தொடர்பில் எதுவும் சபாநாயகர் செய்யவில்லை. இதேவேளை 2018ஆம் ஆண்டில் மகிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்படும் போது அதற்கு உயர்நீதிமன்றம் தடையுத்தரவை விதித்த போது அப்போது இதனை ஏற்க மாட்டோம் என்று கூறவில்லை.
அப்போது மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்தார். அவர் அதனை நிராகரிக்கவில்லை. இந்நிலையில் ஜனாதிபதிக்கு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைய செயற்பட கூறுங்கள். இல்லையென்றால் அவர் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய பின்னர் அரசியலமைப்பை மீறியதாக அவருக்கு எதிராக வழக்குத் தொடரவும் முடியும் என்றார்.
இதன்போது சபையில் அமைதின்மை நிலவிய போது சபை முதல்வரான சுசில் பிரேமஜயந்த, 2017ஆம் ஆண்டு முதல் நிறைவேற்றுத்துறையின் பகுதியாகவே அரசியலமைப்பு பேரவை உள்ளது. இந்நிலையில் தற்போது பொலிஸ்மா அதிபரின் பதவி இடைநிறுத்தப்பட்டுள்ளது. பதவி நீக்கப்படவில்லை.
இதில் மாற்றம் செய்ய வேண்டுமாயின் நியமித்த நிறுவனத்தினாலேயே அதனை மீள மாற்ற முடியும். இதில் பாராளுமன்றத்திற்கும் பணி உள்ளது. பதவி வெற்றிடமாகாத நிலையில் எப்படி பதவிக்கு இன்னுமொருவரை நியமிக்க முடியும். இதன்படி அரசியலமைப்பு பேரவையால் இந்த விடயம் தொடர்பில் தீர்மானிக்கப்பட வேண்டும் என்றார்.
இவ்வேளையில் எழுந்த எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்ஷ்மன் கிரியெல்ல,சபை முதல்வர் முன்வைத்த விடயங்கள் தொடர்பில் நான் ஆச்சரியமடைகின்றேன். குறித்த விடயத்தில் உயர்நீதிமன்றத்தினால் தீர்மானங்களை எடுக்க முடியும். இதனை நிராகரிக்க முடியாது. அனுர பண்டார நாயக்கவின் வழக்கு தீர்ப்பை இந்த விடயத்துடன் ஒப்பிட முடியாது. குறித்த விடயம் அரசியலமைப்பு பேரவையுடன் தொடர்புடையது. இது தொடர்பில் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்ய முடியும். பேரவையின் உள்ளே தேசபந்து தென்னக்கோன் நியமிக்கப்படவில்லை. கூட்டம் முடிந்த பின்னரே அவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்றார்.
இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன எதிர்க்கட்சி பிரதம கொரடாவின் கருத்தை நிராகரித்ததுடன், நான் அரசியலமைப்பை எங்கேயும் மீறியதில்லை என்றார்.
இதனை தொடர்ந்து ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவிக்கையில்,
அரசியலமைப்பு பேரவை பாராளுமன்றத்தின் பகுதி என்று ஒரு தரப்பு கூறும் போது,இன்னுமொரு தரப்பு இதனை நிறைவேற்றுத்துறையின் பகுதியாக கூறுகின்றனர். இவ்வாறு கூறுவது பாரதூரமான விடயமாகும். சபாநாயகரை பழியாக்கி தனக்கு வேண்டியவாறு ஜனாதிபதி செயற்படுவதற்கு இடமளித்துவிட வேண்டாம். இந்த விடயம் வழக்கும் திருடனுடையதே, பொருளும் திருடனுடையதே என்று கூறினார்.
இவ்வேளையில் மீண்டும் எழுந்த எதிர்க்கட்சித் தலைவர், இந்த பிரச்சினையில் இருந்து ஜனாதிபதி விலகிச் செயற்பட முடியாது. அவர் வேட்பாளர் என்று கூறி அதில் இருந்து விலகிவிட முடியாது. பதில் பொலிஸ்மா அதிபரை அவர் நியமிக்க வேண்டும். அவரால் செய்ய முடியாவிட்டால் அவரை பதவி விலக கூறுங்கள். அதன்பின்னர் பதில் ஜனாதிபதி ஊடாக பணிகளை முன்னெடுக்கலாம் என்றார்.
இதனை தொடர்ந்து எதிர்க்கட்சியின் முஜிபூர் ரஹ்மான் உள்ளிட்ட மேலும் சில உறுப்பினர்களும் இந்த விடயம் தொடர்பில் கருத்துக்களை முன்வைத்து பொலிஸ்மா அதிபர் விடயத்தில் சபாநாயகர் மற்றும் ஜனாதிபதியின் செயற்பாடுகளை விமர்ச்சித்ததுடன், இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.
இதனால் சபையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த சர்ச்சை நீடித்ததுடன், இது தொடர்பில் தனது பதிலை வழங்கிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, என்னால் எடுக்கப்பட்ட தவறான தீர்மானங்களால் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் நான் அவ்வாறு தவறான தீர்மானங்களை எடுக்கவில்லை. சரியான முடிவையே எடுத்துள்ளேன். மனசாட்சிக்கமைய சரியாக அனைத்து விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து கலந்துரையாடி நடவடிக்கை எடுத்தேன் என்றார்.