நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் இலங்கை தூக்கு மேடைக்கு செல்ல நேரிடும் – எதிரணி

சர்வதேசத்தில் இலங்கை குற்றவாளி கூண்டில் உள்ளது. நிகழ்நிலை காப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால்  இலங்கை நேரடியாக தூக்கு மேடைக்கு செல்ல நேரிடும். ஆகவே, இந்த சட்டமூலத்தை கடுமையாக எதிர்க்கிறோம் என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்ற அமர்வின் போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை சபைக்கு சமர்ப்பித்தார். இதன்போது நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தின் நோக்கத்தை பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம்  வருமாறு அறிவித்தார்.

‘நிகழ்நிலை காப்பு ஆணைக்குழுவை தாபிப்பதற்கும், இலங்கையில் நிகழ்வு பற்றிய குறித்த சில கூற்றுக்களின் நிகழ்நிலைத் தொடர்பாடலை தடை செய்வதற்கு ஏற்பாடு செய்வதற்கும், தடை செய்யப்பட்ட நோக்கங்களுக்காக நிகழ்நிலைக் கணக்குகள் மற்றும்  உறுதிப்படுத்தப்படாத நிகழ்நிலைக் கணக்குகளின் பயன்பாட்டைத் தடுப்பதற்கும், இலங்கையில் தடை செய்யப்பட்ட நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் நிகழ்நிலை  அமைவிடங்களை  அடையாளங்கண்டு வெளிப்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கும், நிகழ்வு பற்றிய பொய்யான கூற்றுக்களின் தொடர்பாடலுக்கு நிதியளித்தல் மற்றும் வேறு ஆதரவை ஒடுக்குவதற்கும் அத்துடன் அவற்றுடன் தொடர்புப்பட்ட அல்லது அவற்றின் இடை நேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்கும் நிகழ்நிலை காப்பு சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிகழ்நிலை காப்பு சட்டமூலம் பாரதூரமானது என்பதால் நாங்கள் முழுமையாக எதிர்ப்பு தெரிவிப்போம்.

 நிகழ்நிலை காப்பு சட்டமூலத்துக்கு சர்வதேசம் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. சர்வதேசத்தில் இலங்கை குற்றவாளி கூண்டில் உள்ளது.இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் நேரடியாக தூக்கு மேடைக்கு செல்ல நேரிடும் . அந்த அளவுக்கு  இந்த சட்டமூலம் ஜனநாயக மரபுகளுக்கு முரணானது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கடந்த கூட்டத்தொடருக்கு  நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சென்றார்.இந்த முறை சமாளிக்க முடியாது என்பதால் அவர் செல்லவில்லை,இந்த முறை வெளிவிவகாரத்துறை அமைச்சரும் செல்லவில்லை. எவரும் செல்லவில்லை.

நிகழ்நிலை காப்பு சட்டமூலம்  ஊடகத்துறை அமைச்சுடன் தொடர்புடையது.தொடர்பாடலுடன் தொடர்புடைய சட்டமூலத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் எவ்வாறு சமர்பிக்க முடியும்.ஊடகத்துறை அமைச்சர் காணாமல் போயுள்ளார்.தொடர்பாடல் விவகாரத்தை அரசாங்கம் பொலிஸூக்கு பொறுப்பாக்கியுள்ளது என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை நல்லாட்சி அரசாங்கமே தயாரித்தது.2016 ஆம் ஆண்டு நீதி ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட வரைபை நீதியமைச்சு திருத்தம் செய்து அதை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்கியது.அதனையே நான் சமர்ப்பித்தேன் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய  எதிர்க்கட்சிகளின் சுயாதீன உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பாராளுமன்றத்துக்கு சட்டமூலம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டால்  அதனை 14 நாட்களுக்குள் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த முடியும்.ஆனால் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை 14 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த முடியாது.

பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் குறித்த சட்டமூலம் உள்ளடக்கப்பட்டவுடன் அதனை 14 நாட்களுக்குள் சவாலுக்குட்படுத்த முடியும்.ஆனால்  நிகழ்நிலை காப்பு சட்டமூலம் கடந்த செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதி ஒழுங்கு பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டது.கடந்த மாதம் 28,29,30,01 ஆகிய திகதிகளில் விடுமுறை வழங்கப்பட்டதால் நீதிமன்றத்துக்கு செல்லும் காலவகாசம் முடக்கப்பட்டுள்ளது என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் சட்டமூலத்தை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தும் 14 நாட்கள் காலவகாசத்தை இவர் அமைச்சராக பதவி வகித்த (ஜி.எல்.பீரிஸை நோக்கி) அரசாங்கம் 20 ஆவது திருத்தம் ஊடாக 7 நாட்களாக வரையறுத்தது.பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இவரே சட்ட ஆலோசகராக செயற்பட்டார்.அப்போதைய  ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ  இவரது ஆலோசனைக்கு அமையவே செயற்பட்டார்.நாங்கள் நாட்டு மக்களின் உரிமைகளை பறிக்கவில்லை.

நிகழ்நிலை காப்பு சட்டமூலம் தொடர்பான விடயங்கள் இன்றைய (நேற்று) ஒழுங்கு பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.ஆகவே உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தும் 14 நாட்கள் காலவகாசம் முழுமையாக காணப்படுகிறது.நாட்டு மக்கள் எவரும் உயர்நீதிமன்றத்தை நாடலாம் தடையேதுமில்லை என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *