தேசிய மெய்வல்லுனர் போட்டிகளில் பதக்கங்களை கைப்பற்றிய வடமாகாண வீர, வீராங்கனைகள்:

கனிஷ்ட தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல வீர, வீராங்கனைகளும் பதக்கங்களை வென்றுள்ளனர்.

கடந்த நான்கு நாட்களாக தியகம விளையாட்டரங்கில் நடைபெற்று நேற்றுடன் (15) நிறைவடைந்த இந்தப் போட்டியில் பல தேசிய சாதனைகளும் முறியடிக்கப்பட்டன.

குறிப்பாக 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் அளவெட்டி அருணோதயா கல்லூரி வீராங்கனை செல்வராசா நிருசிகா புதிய சாதனை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

20 வயதுக்குட்பட்ட கோலூன்றிப் பாய்தலில் யாழ்ப்பாணம் பாடசாலைகள் முழு ஆதிக்கம் செலுத்தி வெள்ளி, வெண்கலப் பதக்கங்களையும் சுவீகரித்தன.

20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ்ப்பாணம் ஸ்கந்தவரோதயா கல்லூரி வீரர் என். டன்ஸ்சன் 4.30 மீற்றர் உயரத்தைத் தாவி தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார். இந்தப் போட்டியில் சாவகச்சேரி இந்து கல்லூரி வீரர் எஸ். கஜானன் (4.10 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 10000 மீற்றர் வேகநடைப் போட்டியில் யாழ். மாவட்ட மெய்வல்லுநர் சங்கம் சார்பாக பங்குபற்றிய ரவிகுமார் தனுஷியா (1:10:39.47) தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார்.

அதேபோன்று 23 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 10000 மீற்றர் வேகநடைப் போட்டியில் யாழ். மாவட்ட மெய்வல்லுனர் சங்கம் சார்பாக பங்குபற்றிய ஜீவேஸ்வரன் தமிழரசி (1:07:57.46) வெண்கலப்பதக்கத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் வெற்றுக் காலுடன் போட்டியிட்டதாகவும் நிதி உதவி மூலமே பாதணியை பெற்று இந்தப் போட்டியில் பங்கேற்றதாகவும் வெண்கலம் வென்ற தமிழரசி குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *