தேசிய சொத்துக்களை கொள்ளையடித்த கள்வர்களை கைது செய்ய பூரண ஒத்துழைப்பு:

தேசிய சொத்துக்களை கொள்ளையடித்த கள்வர்களை கைது செய்வதாகவும், அந்த சொத்துக்களை மீட்பதாகவும் அரசாங்கம் மக்களுக்கு வாக்குறுதியளித்திருக்கிறது. அதனை நிறைவேற்றுவதற்கு எதிர்க்கட்சியாக எமது முழுமையான ஒத்துழைப்பை நாம் அரசாங்கத்துக்கு வழங்குவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில்  ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பிரதான எதிர்க்கட்சியாக மீண்டும் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவாகியுள்ளது. மூன்றில் இரண்டுக்கும் அதிக பெரும்பான்மையுடைய ஆளுங்கட்சியுடன் பாராளுமன்றத்தில் செயற்பட வேண்டியுள்ளது. அதேபோன்று தாம் இரு தேர்தல் காலங்களிலும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு காணப்படுகிறது.

அவை தொடர்பில் நாம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம். குறிப்பாக தேசிய சொத்துக்களை கொள்ளையடித்த கள்வர்களை கைது செய்வதாகவும், அந்த சொத்துக்களை மீட்பதாகவும் அரசாங்கம் மக்களுக்கு வாக்குறுதியளித்திருக்கிறது. அதனை நிறைவேற்றுவதற்கு எதிர்க்கட்சியாக எமது முழுமையான ஒத்துழைப்பை நாம் அரசாங்கத்துக்கு வழங்குவோம்.

அதேவேளை இந்த இடத்திலிருந்து எமது அடுத்த வெற்றிக்கான பணத்தையும் ஆரம்பிக்கவுள்ளோம். இலங்கையின் தேர்தல் வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இடம்பெறும் எந்தவொரு பொதுத் தேர்தலிலும் இதேபோன்ற பெறுபேறுகளே கிடைத்துள்ளன. இம்முறைத் தேர்தலிலும் அதுவே இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அம்பாந்தோட்டையில் தனது பணத்தை ஆரம்பித்தார். அவர் அன்றிலிருந்து மக்களுடனேயே இருக்கின்றார். எனவே புதிதாக வீதிஸ்ரீக்கிறங்கி தன்னை வெளிப்படுத்த வேண்டிய தேவை அவருக்கு இல்லை. ஜே.வி.பி. இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் கடும் தோல்விகளை சந்தித்திருக்கிறது.

ஆனால் அந்த தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை. தற்போது அந்த கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கிறது. ஆனால் எமது தலைவர் ஒரு கட்சியைப் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் மாத்திரமே கடந்துள்ளன. எதிர்காலத்தில் நாமும் அதிகாரத்தை கைப்பற்றுமளவுக்கு எம்மை பலப்படுத்திக் கொள்வோம் என்றார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *