பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றுள்ள இலங்கை வம்சாவளி தமிழரான உமாகுமரனிற்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
இங்கிலாந்து நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிட்டு வென்றுள்ள அன்புத்தங்கை உமா குமரன் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் தமிழர் என்ற பெருமையை தங்கை உமா குமரன் அவர்கள் பெற்றுள்ளது மிகுந்த மனமகிழ்வை அளிக்கிறது.
இனவழிப்பு தந்த காயங்களோடும் கண்ணீரோடும் ஊரிழந்து உறவிழந்து உரிமையிழந்து உயிர் சுமந்த உடல்களாக அடைக்கலம் தேடி அலைகின்ற நூற்றாண்டுப் பெருந்துயரைக் கண்ட தமிழினத்திற்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடைக்கும் இதுபோன்ற சிறுசிறு அதிகாரப்பகிர்வும் அங்கீகார நிமிர்வும் மிகவும் இன்றியமையாததாகும். தூரத்தில் தெரியும் சிறு பொறியும் இன விடுதலைக்கனவை நனவாக்கும் பெரு வெளிச்சத்தைத் தரவல்லது என்பதால் தங்கை உமா குமரனின் வெற்றி உலகத்தமிழினத்தின் வெற்றியாகும். தம்மைத் தேர்ந்தெடுத்த ஸ்ட்ராட்ஃபோர்ட்ரூபோ தொகுதி மக்களின் மேம்பாட்டிற்கும் நல்வாழ்விற்கும் சிறப்புற பணியாற்றவும் உலகத்தமிழர்களின் உரிமைக்குரலாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஒலிக்கவும் தங்கை உமா குமரனுக்கு என்னுடைய அன்பும் வாழ்த்துகளும்!