துப்பாக்கி சூட்டில் முடிந்த காணி பிரச்சனை: ஒருவர் பலி!

மஹகும்புக்கடவல, செம்புகுளிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை படுகாயமடைந்து புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (10) பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மஹகும்புக்கடவல பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவர் மஹகும்புக்கடவல, செம்புகுளிய பிரதேசத்தில் காணியை வைத்திருக்கும் 56 வயதுடைய அதிகாரி முதியன்சேலாகே மெனிக்ராலா அதிகாரி எனும் 3 பிள்ளைகளின் தந்தை எனத் தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்கள், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவருடன் மூன்று வருடங்களாக காணித் தகராறு இருந்ததாகவும், இரண்டு வருடங்களுக்கு முன்னர் மஹகும்புக்கடவளவில் பொலிஸ் நிலையம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் ஆனமடுவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனமடுவ பொலிஸார் இதனை மஹகும்புக்கடவல பிரதேச செயலகத்திடம் ஒப்படைத்திருந்த போதிலும், குறித்த நபரை சுட்டுக் கொன்ற 43 வயதான திருமணமாகாத நபர், மஹகும்புக்கடவல பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அங்கு தாம் மரமுந்திரிகை உள்ளிட்ட பயிரிட்ட நிலத்தை, பிரதேச செயலகத்தால் குறித்த நபருக்கு வழங்க ஏற்பாடு செய்ததாக சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இது தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் அடிக்கடி பிரச்சனைகள் எழுந்து வந்துள்ளதாகவும், அவை தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் இடம்பெற்ற நேற்றையதினம் (10) குறித்த பிரதேசத்தில் பற்றைக் காடான பகுதியில் சந்தேகநபர் மறைந்திருந்துள்ளதோடு, நாட்டுத் துப்பாக்கியை பயன்படுத்தி, காணித் தகராறில் ஈடுபட்ட மூன்று பிள்ளைகளின் தந்தை மோட்டார் சைக்கிளில் வரும் வரை காத்திருந்து துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர், பலத்த காயங்களுடன் வேகந்தேயிலிருந்து 300 மீற்றர் தொலைவில் உள்ள தனது வீட்டை நோக்கி தப்பியோடி வந்ததாகவும், இதனைத் தொடர்ந்து வீட்டில் உள்ளவர்கள் அவரை புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இந்தக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர், துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியுடன் கொலை இடம்பெற்று இரண்டு மணித்தியாலங்களுக்கு பின்னர் மஹகும்புக்கடவல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *