திருக்கேதீஸ்வரத்தைப் புனமைத்துத் தந்தமை போல் பாடல் பெற்ற மற்றைய தலமான திருக்கோணேஸ்வரத்தையும் பெருங்கோயிலாகப் புனரமைக்கும் திட்டம் முன்வைக்கப்படுமானால் அதனை இந்தியா சாதகமாகப் பரிசீலித்து அதற்கு உதவும் என,இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதிமொழி வழங்கியுள்ளார்.
மூன்று நாள் பயணமாக இலங்கை வந்துள்ள நிர்மலா சீதாராமன் நேற்றுக் காலை திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்ட பின்னர் நேற்று முற்பகல் திருக்கோணேஸ்வரரின் புனித பூமியில் வைத்து இந்த உறுதிமொழியை அவர் வழங்கினார்.
ஆலய நிர்வாகிகள் அவரை வரவேற்று உரையாடினர். அகில இலங்கை இந்துமா மன்றத்தின் துணைத் தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் அப்போது ஆலய நிர்வாகிகள் சார்பில் ஒரு கோரிக்கையை முன்வைத்தார்.
போர்த்துக்கீசரால் அழிக்கப்பட்டு, ஒல்லாந்தரால் சூறையாடப்பட்ட திருக்கோணேஸ்வரம் ஆலயத்தை இன்று ஓரளவு பேணிப் பாதுகாக்கின்றோம். இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயத்தையும் மன்னார் திருக்கேதீஸ்வரம் போன்று கருங்கற்களால், பெருங்கோயிலாகப் புனரமைத்துத் தர இந்தியா முழு உதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் திருக்கோணேஸ்வரம் ஆலய நிர்வாகத் தலைவர் துசியந்தன் உட்படப் பலரும் அந்த உரையாடலின்போது உடனிருந்தனர்.
“எமது கோரிக்கையைச் செவிமடுத்த இந்திய நிதி அமைச்சர், மன்னார் திருக்கேதீஸ்வரம் போன்று கோணேஸ்வரத்தையும் புனரமைக்க உதவ முடியும் என்று தெரிவித்தார். அதற்கான முன்னேற்பாடுகள், முறைப்படியான கோரிக்கைகள், அனுமதிகளைப் பெறுவதற்கான நடவடிகைகளை மேற்கொள்ளுமாறு நிர்மலா சீதாராமன் உற்சாகத்தோடு தெரிவித்தமை எமக்கு மகிழ்ச்சியளிக்கின்றது” – என்று ஆறு. திருமுருகன் தெரிவித்தார்.