கடந்த சில மாதங்களுக்கு முன்பு 700 ரூபாய் முதல் 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட முருங்கைக்காய் கிலோ ஒன்றின் விலை தற்பொழுது 35 ரூபாய் தொடக்கம் 40 ரூபாய்க்கு கொள்வனவு செய்யப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக பல விவசாயிகள் தமது தோட்டத்தில் உள்ள முருகங்கை காயினை விற்பனை செய்ய முடியாத நிலையில் உள்ளதாகவும், இதன் காரணமாக இடைத்தரகர்கள் அதிக இலாபம் பெறுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
குறைந்த விலையில் கொள்வனவு செய்யப்படும் முருங்கைக்காயானது ஒரு கிலோவின் 250 தொடக்கம் 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இருப்பினும் தோட்டச் செய்கையாளர்களிடம் குறைந்த விலைக்கு கொள்வனவு செய்ய முற்படுவதுடன், பல மாத காலமாக வெயில் மழை பாராது அயராது உழைத்து பசளை கிருமிநாசினி என பல ஆயிரக்கணக்கான ரூபாயை செலவழித்து முருங்கை செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் தற்பொழுது அறுவடை செய்த முருங்கைக்காயை விற்பனை செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.
இந்நிலை தொடருமாயின் இனிவரும் காலங்களில் முருங்கை செய்கையில் இருந்து விடுபட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் கவலை வெளியிடுகின்றனர்.
அனைத்து உற்பத்திகளிற்கும் அரசாங்கம் நியாய விலை என கூறி வரும் நிலையில் தமது மரக்கறி உற்பத்திகளுக்கு மாத்திரம் உரிய விலை இன்றி அல்லலுறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தம்மிடம் உள்ள முருங்கைக்காயை ஒரு கிலோ நூறு ரூபாய்க்கு மேல்தான் கொடுக்க முடியும் எனவும், அவ்விலைக்காவது தம்பிடம் உள்ள முருங்கைக்காயை கொள்வனவு செய்ய முன்வருமாறும் முருங்கை செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.