தமிழ் தேசியம் என்று பேசுவார்கள், விடுதலைப் புலிகளின் முழுமையான ஆதரவுடன் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை அழித்தது மட்டுமே என தமிழ் மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் (01) சுழிபுரம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் மக்களுடைய வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்கு சென்றவர்களை இரண்டு வகையாக பிரித்துக்கொள்ள முடியும். தமிழ்த் தேசிய அரசியலை நாங்கள் முன்னெடுக்கப்போகின்றோம், எங்களுடைய மாவீரர்களின் கனவுகளை நாங்கள் சுமந்து செல்ல போகின்றோம், அந்த விடுதலையை வென்றெடுக்க போகின்றோம் என ஒரு தரப்பு நாடாளுமன்றம் சென்றது.
15 ஆண்டுகளாக நாங்கள் தமிழ்த் தேசியம் வேண்டும் என்று நாங்கள் வாக்களித்துக் கொண்டிருந்தோம். ஆனால் எதனை இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு சென்று சாதித்தார்கள் என்பதை நீங்கள் அவர்களிடம் கேட்க வேண்டும்.
2001ஆம் ஆண்டு எங்களுடைய தலைவரால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு அது இன்று அது இந்த தேர்தல் பரப்பிலேயே இல்லாமல் அழிக்கப்பட்டிருக்கிறது. இதுவா தமிழ் தேசியத்தை வென்றெடுக்கின்ற தரப்புகளின் சாதனை.