காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழக முதல்வர் உருவப்படத்திற்கு கன்னட அமைப்பினர் இறுதிச்சடங்கு செய்ததற்கு, நாம் தமிழர் கட்சி சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் ராமநகரில் கர்நாடக பாதுகாப்பு வேதிகே அமைப்பு சார்பில் நடந்த போராட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவரது உருவப்படத்திற்கு பொட்டு வைத்தும், மாலை அணிவித்தும் இறுதிச்சடங்கு செய்தனர்.
இது தொடர்பாக சீமான் எதிர்ப்பு தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தமிழ்நாட்டுக்கு உரிமையான காவிரி நீரை உரிய அளவில் தர மறுத்து வரும் கர்நாடக அரசு நீதிமன்ற உத்தரவுபடி திறந்துவிடும் சொற்ப நீரையும் திறக்கக் கூடாது என கன்னட அமைப்புகள் போராடி வருவது சிறிதும் மனிதத்தன்மையற்ற கொடுஞ்செயலாகும்.
போராட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு முதலமைச்சருக்கு இறுதிச் சடங்குகள் செய்து அவமதிப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
கர்நாடக அமைப்புகள் குறைந்தபட்ச மனித மாண்புடன் நடந்துகொள்ள வேண்டும்.தமிழ்நாடு அரசையும், முதலமைச்சரையும் கன்னட அமைப்புகள் அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
பதிலுக்கு கர்நாடக முதலமைச்சரை அவமதிக்க ஒரு நொடி ஆகாது. எனினும் தமிழரின் மாண்பு அத்தகைய இழிசெயலில் ஈடுபட அனுமதிக்காது” எனக் கூறியுள்ளார்.