மண்ணை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் நாம் ஒரு அணியிலே இருக்கவேண்டும். அப்படியிருந்தாலே அரசாங்கம் எம்மை திரும்பி பார்க்கும் நிலமை ஏற்படும் என்று பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொதுக்குழு கூட்டமும் புதிய நிர்வாகத்தெரிவும் வவுனியா நகரசபை மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. அதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“ எந்த தேர்தலையும் சந்திப்பதற்கும் நாம் தயாராக தன் இருக்கின்றோம். ஜனாதிபதித்தேர்தல் ஒன்று நடந்தால் அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் இனப்பிரச்சனை சார்ந்து தமிழ்தரப்பிற்கு என்ன செய்யவேண்டும். என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
வெறுமனே கருத்துச்சொல்லி விட்டு ஏமாற்றுகின்ற நிலைமையினை இம்முறை மக்கள் ஏற்க மாட்டார்கள். அதற்கு உடந்தையாக நாங்களும் இருக்க மாட்டோம்.
பொதுவேட்பாளர் விடயத்தை நாம் சரியாக கையாளவேண்டும் ஒருவரை நிறுத்திவிட்டு சொற்பவாக்குகளை பெறும் நிலை இருந்தால் ஒட்டுமொத்த தமிழினத்தின் மானமே போய் விடும். எனவே சரியான நெறிப்படுத்தலின் ஊடகவே அந்த விடயத்தை செய்யவேண்டும்.
நாளைய தினம் எமது மாநாட்டில் வலுவான ஒரு கோரிக்கையினை முன்வைக்க இருக்கின்றோம். எங்களிடத்தில் ஒற்றுமை இல்லை என்று ஏளனப்படுத்தும் விமர்சனத்தை தொடர்ச்சியாக சந்திக்கின்றோம். எனவே அரசியல் கதிரைகளுக்காக வசனங்களை மாத்திரம் பேசிக்கொண்டிருப்பதில் பயனில்லை.
எம்மை பொறுத்தவரை இனப்பிரச்சனை தீர்க்கப்படவேண்டுமாக இருந்தால் எமது மண்ணை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் நாம் ஒரு அணியிலே இருக்கவேண்டும். அப்படியிருந்தாலே அரசாங்கம் எம்மை திரும்பி பார்க்கும் நிலமை ஏற்ப்படும். அத்துடன் சர்வதேசத்தின் பார்வையினையும் பெறமுடியும்.
இதன் போது தென் இலங்கை எங்களை பார்த்து அச்சப்படும். அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள தயாராக இருக்கின்றோம்.
எம்மை பொறுத்தவரையில் தமிழரசுக்கட்சியினை நாம் ஒதுக்கிவிட முடியாது. பிரச்சனை தொடர்ந்து இருக்கின்றது. இந்த ஒற்றுமைக்குள் நாங்கள் கொண்டு வரவேண்டும். ஆனால் பொதுச்சின்னம் என்பதே எமது கருத்து. பொதுச்சின்னமாக குத்துவிளக்கு அமைந்திருக்கின்றது. அவர்களோடு பேசி பொதுச்சின்னத்தின் கீழ் அணிதிரள்வதற்கான முயற்சியினை நிச்சயமாக நாங்கள் மேற்கொள்ளுவோம். தனிப்பட்ட கட்சியின் கீழ் எமது ஒற்றுமை இருக்காது என்றார்.