அரசாங்கம் பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக, தண்டனை சட்டக் கோவையில் முன்வைத்துள்ள திருத்தங்களை மீளப்பெறாவிட்டால் நாட்டில் பாரிய போராட்டகளை முன்னெடுக்கப்போவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”பெண்கள் பாலியல் உறவில் ஈடுபடுவதற்கான வயதெல்லையை 16 இலிருந்து 14ஆகக் குறைப்பதற்கு, தண்டனை சட்டக் கோவையில் அரசாங்கம் திருத்தங்களை முன்வைத்துள்ளது. இவ்வாரம் நாடாளுமன்ற அமர்வின் போது இந்த திருத்தத்தை அரசாங்கம் மீளப்பெறாவிட்டால் பாரிய ஆர்ப்பாட்டங்களை நாம் முன்னெடுப்போம். அரசியலமைப்பில் பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு தெளிவாக உறுதிப்படுத்தப்படவில்லை.
தொழிற்துறையில் பெண்களின் பங்கழிப்பு 33 சதவீதமாவே. அரசாங்கம் செய்ய முனைகின்ற மிக முட்டாள் தனமான செயல் ஒன்று தொடர்பில் தற்போது வெளிப்படுத்தவுள்ளேன். அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ள தண்டனை சட்டக் கோவை திருத்தத்தில்,
குற்றங்களை தடுப்பதற்கன்றி அவற்றை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளையே முன்னெடுக்கிறது.
பாலியல் உறவுகள் தொடர்பான விருப்பத்தை வெளிப்படுத்தும் வயதை, 16 இலிருந்து 14ஆகக் குறைப்பதற்கான திருத்ததை முன்வைத்துள்ளது. அந்த வகையில் 14 வயதுடைய சிறுமிகளுக்கு இதற்கான விருப்பத்தைத் தெரிவிக்க முடியும்.
இன்று நாடளாவிய ரீதியில் பாலியல் துஷ்பிரயோகம், துன்புறுத்தல், சீண்டல்கள் வானளவு உயர்வடைந்துள்ளன.
இவற்றுக்கு அரசாங்கம் வழங்கும் பதில் யாதெனில், பாலியல் உறவில் ஈடுபடுவதற்கான வயதெல்லையைக் குறைப்பதாகும்.
பாலியல் துஷ்பிரயோகங்களை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகவுள்ளதாக என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அது மாத்திரமல்ல. 22 வயதுக்குட்பட்ட ஆணொருவர் ஏதேனும் பாலியல் துன்புறுத்தல் அல்லது துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டால், அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை இந்த தண்டனை சட்டக் கோவை திருத்தத்தின் ஊடாக தளர்த்தப்பட்டுள்ளது.
இது சரியா என்று நான் கேட்கின்றேன்? பெண்கள் துஷ்பிரயோகத்தைப் போன்றே ஆண்கள் துஷ்பிரயோகத்துக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும். எவ்வாறிருப்பினும் அதற்காக வெவ்வேறாக உறுப்புரைகள் தயாரிக்கப்பட வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்