சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், மற்ற மூன்று பேருக்கும் தலா ரூ.10 கோடியும் அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பு கூறியது.
இந்த தீர்ப்பை கர்நாடக ஐகோர்ட்டு ரத்து செய்து, அவர்கள் 4 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. ஆனால் மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு, தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பு வந்தபோது, ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்ட காரணத்தால், அவரது பெயர் தீர்ப்பில் இருந்து கைவிடப்பட்டது. சசிகலா உள்பட மற்ற 3 பேரும் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் தண்டனையை அனுபவித்தனர். சசிகலாவும், இளவரசியும் அபராத தொைகயை செலுத்தினர். ஆனால் சுதாகரன் அபராத தொகையை செலுத்தாததால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனையை அனுபவித்தார். இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்பட 4 பேரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 29 வகையான பொருட்களை ஏலம் விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரினார். இந்த மனு மீது நீதிபதி மோகன் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே தாங்கள் ஜெயலலிதாவின் வாரிசுகள் என்பதால் அவரது சொத்துகளை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி அந்த தனிக்கோர்ட்டில் ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் தாக்கல் செய்த மனு சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்தநிலையில் பொருட்களை ஏலம் விடக்கோரி தாக்கல் செய்த வழக்கு விசாரணை பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் நீதிபதி மோகன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. கர்நாடக அரசு சிறப்பு வக்கீல் கிரண் ஜவளி சார்பில் அவரது இளநிலை வக்கீலும், தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரியும் ஆஜர் ஆனார்கள். வழக்கு விசாரணையின் போது, கர்நாடக அரசு வக்கீல், இந்த வழக்கில் சோ்க்கப்பட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் ஏலம் விடப்படக்கூடிய சொத்துகள் குறித்த பட்டியலை மூடிய கவரில் தாக்கல் செய்தார்.
அதைத்தொடர்ந்து நீதிபதி மோகன், சொத்து குவிப்பு வழக்கில் தொடர்புடைய சொத்துகளை மட்டுமே ஏலம் விட முடியும் என்றும், புடவைகள், செருப்புகள் உள்ளிட்ட 28 வகையான பொருட்களை ஏலம் விட முடியாது என்றும் கூறினார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய முடக்கப்பட்டுள்ள வங்கி கணக்குகளில் உள்ள டெபாசிட் தொகை குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு கடிதம் எழுதி அதன் டெபாசிட் விவரங்களை பெற வேண்டும் என்று கோர்ட்டு அதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் அந்த 30 கிலோ தங்க, வைர நகைகள் உள்ளிட்ட நிறுவனங்களின் சொத்துகளின் இன்றைய மதிப்பு குறித்தும் தெரிவிக்கும்படி அரசு வக்கீலுக்கு நீதிபதி உத்தரவிட்டார். தீர்ப்பில் கூறியுள்ளபடி 30 கிலோ தங்க, வைர நகைகள் உள்ளிட்ட பொருட்களை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் தொகையில் ரூ.100 கோடியை அபராதமாக செலுத்த வேண்டும் என்றும், மீதமுள்ள தொகையில் ரூ.5 கோடியை கர்நாடக அரசுக்கு தமிழக அரசு வழக்கு செலவாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி கூறினார். அதைத்தொடர்ந்து இந்த வழக்கின் அடுத்த விசாரணை வருகிற 31-ந் தேதிக்கு (வியாழக்கிழமை) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.