கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் ஜான்சன் டெக்னாலஜி என்ற தனியார் கல்லூரி ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இன்று காலை முதலே கல்லூரியில் வகுப்புகள் வழக்கம்போல் நடந்து வந்த நிலையில், மாலையில் திடீரென கல்லூரியின் ஆடிட்டோரியம் பகுதியில் இருந்து அதிகப்படியான புகை வெளியானது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தீ எரிந்து வரும் நிலையில், சூலூர், பல்லடம் ஆகிய பகுதிகளில் இருந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இதனால் கல்லூரி கட்டிடங்களுக்குள் இருந்து வெளியேறிய மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் பாதுகாப்பிற்காக தஞ்சமடைந்துள்ளனர். உள்ளே யாரேனும் சிக்கி உள்ளார்களா என்பது தொடர்பாக தீயணைப்புத்துறை வீரர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கல்லூரியின் ஆடிட்டோரியம் பகுதியில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் அங்கே வைக்கப்பட்டிருந்த ரெசின் மற்றும் ஸ்பாஞ்ச் கொண்ட இருக்கைகள் வழியாக தீ அனைத்து இடத்திற்கு பரவியது தெரிய வந்தது. சுமார் 7 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஆடிட்டோரியம் பகுதியில் மாணவர்கள் ஆசிரியர்கள் யாரும் அதிகம் செல்லாத நிலையில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.