நாட்டின் 9 ஆவது நிறைவேற்றுத்துறை அதிகாரமுடைய ஜனாதிபதியை தெரிவு செய்யும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 40 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ள நிலையில், வேட்புமனுக்களை பொறுப்பேற்றல் இன்று வியாழக்கிழமை (15) இடம்பெறவுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை (15) வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
வேட்பாளர்கள்,வேட்பாளரின் வேட்புமனுப்பத்திரத்தில் கையொப்பமிட்டவர்கள், வேட்பாளர் ஒருவர் சார்பாக மூன்று விருந்தினர்கள், அரசாங்க தகவல் திணைக்களத்தின் அனுமதியுடன் வேட்பு மனுத்தாக்கல் அறிக்கையிடுவதற்கு அனுமதிப் பெற்ற ஊடகவியலாளர்கள், தேர்தல்கள் ஆணைக்குழுவில் அனுமதிப் பெற்ற பணிக்குழுவினர்,, துணைநிலை சேவை வழங்கும் நிறுவன சேவையாளர்கள், தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஊழியர்கள், வேட்பாளர்களின் பிரத்தியேக பாதுகாப்பு அலுவலர்கள் ஆகியோர் மட்டுமே இன்றைய தினம் காலை 9 மணிமுதல் 2 மணிவரையான காலப்பகுதியில் தேர்தல்கள் ஆணைக்குழு அமைந்துள்ள சரண மாவத்தைக்குள் பிரவேசிக்க முடியும்.
இதன் காரணமாக இன்று காலை 6 மணிமுதல் பி.ப 2 மணிவரை சரண மாவத்தை மூடப்பட்டிருக்கும் எனவும். பொது மக்களின் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் இக்காலப்பகுதிக்குள் சரண மாவத்தைக்குள் பிரவேசிக்க முடியாது எனவும் அறிவித்துள்ளது தேர்தல் ஆணையகம்.
இதேவேளை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு 40 பேர் வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். இதற்கமைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட 22 பேரும், வேறு அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட 1 வேட்பாளரும், சுயேட்சை வேட்பாளராக 17 பேரும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு 41 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்த நிலையில் 35 பேர் மாத்திரம் வேட்புமனுக்களை சமர்த்தித்து போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.