அரசியல் தீர்வு, நல்லிணக்கம் உள்ளிட்ட விடயங்களில் அர்த்தப்புஷ்டியான நகர்வுகளை முன்னெடுத்து இலங்கை வாழ் தமிழர்களின் நம்பிக்கையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வென்றெடுக்க வேண்டும் என வலியுறுத்திய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஷ்வரன், ஜனாதிபதியின் வாக்குறுதிகளும் வடக்குக்குக்கான உத்தேச விஜயமும் செயற்பாட்டளவில் அமையுமாயின் ஒத்துழைப்பை வழங்குவோம் என்றும் குறிப்பிட்டார்.
நீண்ட காலமாக தீர்க்கப்படாமலுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்கு தமிழ் வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ் தலைவர்கள் இணைந்து கூறினால் வேட்பாளராகக் களமிறங்குவது குறித்து பரசீலிப்பதாகவும் சி.வி.விக்கினேஷ்வரன் மேலும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை வியாழக்கிழமை (04) வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதோடு, அங்கு தமிழ் அரசியல் தலைவர்களை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய ஜனாதிபதியை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வழமையாக ஜனாதிபதி வடக்கிற்கு விஜயம் செய்யும் போது அவரை சந்தித்து தமிழ்மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவேன். ஆனால் இம்முறை சுகயீனம் காரணமாக ஜனாதிபதியை சந்திப்பது குறித்து இதுவரையில் தீர்மானிக்கவில்லை. நல்லிணக்கம் தொடர்பில் ஒவ்வொருவராலும் காலம் காலமாக பேசப்பட்டு வருகின்றதே தவிர, எவரும் அதனை நடைமுறையில் செய்ய முடிக்கவில்லை. ஒரு தரப்பினர் ஒரு யோசனையை முன்வைக்கும் போது மறுபுறம் சிங்கள பெரும்பான்மை கட்சிகள் அதனை எதிர்க்கும் நிலைமையே காணப்படுகிறது.
எவ்வாறிருப்பினும் ஜனாதிபதி அதனை நடைமுறை சாத்தியமாக்கினால் அதை நாம் வரவேற்கின்றோம். ஆனால் அது எந்த முறையில் செய்யப்படும் என்பது குறித்து எதுவும் கூறப்படவில்லை. மார்ச்சில் இதற்கான தீர்வு வழங்கப்படும் என்றால், அதற்கு முன்னர் தேர்தலுக்கான அறிவிப்புக்கள் வெளியாகக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. ஜனாதிபதியின் இவ்வாறான வாக்குறுதிகளை அரசியல் ரீதியான பேச்சாகவே நான் பார்க்கின்றேன். மாறாக உண்மையாகவே அவரால் அந்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாயின் அதனை நாம் வரவேற்கின்றோம். அவற்றுக்கு இயன்றவரை முழுமையான ஒத்துழைப்புக்களையும் வழங்குவோம்.
வடக்கில் 3000 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் விடுவிக்கப்படாமலுள்ளது. 60 000க்கும் மேற்பட்ட அரசாங்க காணிகள் படையினர் வசம் உள்ளன. அவற்றை மீளக்கையளிப்பதற்கு இதுவரைக் காலமும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. கொழும்பிலுள்ளவர்களின் காணிகளை மீளக்கொடுத்து விட்டு அதனையும் காணி விடுவிப்பு எனத் தெரிவிக்கக் கூடும். எனவே பொதுவான கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு எதனையும் நம்பிவிட முடியாது.
இதுவரைக் காலமும் தேர்தல்களின் போது நாம் சிங்களப் பெரும்பான்மை கட்சிகளை ஆதரித்து வருகின்றோம். ஆனால் அவர்கள் எமது பிரச்சினைகள் குறித்து அறிந்து கொள்வதாகக் தெரியவில்லை. எனவே தனிப்பட்ட ஒருவர் பொது வேட்பாளராகக் களமிறங்கி தமிழ் மக்களின் பிரச்சினைகளை வெளிக் கொண்டுவர முடியுமானால் அது சிறந்ததாகும். அந்த வகையில் கலாநிதி நாகேந்திரன் என்பவரிடம் இது தொடர்பில் நான் கலந்துரையாடிய போது, உடல்நலக் குறைவால் தன்னால் தேர்தலில் போட்டியிட முடியாது என அவர் குறிப்பிட்டார்.
அதன் பின்னர் நீங்கள் களமிறங்குவீர்களா என்று என்னிடம் பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்பினர். தமிழ் கட்சிகளின் தலைவர் இணைந்து இதற்கான அழைப்பினை விடுத்தால் அது குறித்து பரிசீலிப்பதாகக் கூறினேன். இவ்வாறு நான் கூறிய விடயமே தற்போது திரிபுபடுத்தப்பட்ட செய்திகளாக பரவிக் கொண்டிருக்கின்றன. மாறாக நானாக முன்வந்து வேட்பாளராகக் களமிறங்குவதாகக் குறிப்பிடவில்லை என்றார்.